விக்னேஸ்வரனை எச்சரிக்கிறார் ரணில்
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட எந்த முதலமைச்சராலும், தலையீடு செய்ய முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
வடக்கு, தெற்கில் இருந்து பல்வேறு நபர்களும் வெளியிடும் அறிக்கைகளினால், புதிய அரசியலமைப்பு தயாரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது அது தடையின்றி முன்னெடுக்கப்படும்.
புதிய அரசியலமைப்பை அரசியலமைப்பு பேரவையும், வழிநடத்தல் குழுவும் தான் தயாரிக்கும். அதில் எந்த முதலமைச்சரும் தலையிட முடியாது.
வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்து குறித்து கேள்விப்பட்டேன். பல்வேறு நபர்களும் பல்வேறு கருத்துக்களைக் கூறலாம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரும், அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்வதை கருத்தில் கொள்வோம்.
வழிநடத்தல் குழு தனது அறிக்கையை அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கும் எந்த ஆட்சேபனைகளும் இருந்தால் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தெரிவிக்கலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.