கங்கை அமரனுக்கும், எஸ்.பி.பி அவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!- இயக்குனர் வ.கௌதமன்
எங்களின் மூத்தக்கலைஞர்கள் திரு. கங்கை அமரனுக்கும் அவர்களுக்கும், திரு. எஸ்.பி.பி அவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!
இயக்குனர் வ.கௌதமன்
தமிழ்நாடு, தமிழீழம் மட்டுமல்ல – உலகம் முழுக்க வாழுகின்ற எங்களின் இல்லங்களிலும் தமிழர் உள்ளங்களிலும் நிறைந்திருக்கும் தமிழ் திரையுலகின் மூத்தக்கலைஞர்கள் அய்யா எஸ்.பி.பி அவர்களிடமும், அய்யா கங்கை அமரன் அவர்களிடமும் ஒரு அன்பான வேண்டுகோள்.
எங்களின் பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய நீங்கள் இருவரும் ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக ஒரு எழுச்சிமிகு பேரணி நடந்து முடிந்த ஈழத்தின் யாழ் மண்ணிற்கு இசை நிகழ்ச்சிக்காக செல்வதறிந்து பேரதிர்ச்சியடைந்தோம்.
இறுதி யுத்தத்தில் எங்களின் ஒன்றரை லட்சம் உறவுகளை அழித்தொழித்த ராஜபக்சே அவர்களால் “ஒரே தேசம் ஒரே குரல்” என்கிற அடிப்படியில் உருவாக்கப்பட்ட இலங்கை அரச தொலைக்காட்சியான வசந்தம் டிவி, அரச வானொலி வசந்தம் எப்.எம், அரச தொலைத்தொடர்பு நிறுவனம் (Srilanka Telecom) ஆகிய நிறுவனங்களின் பின்னணியில் 2016 அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கும்” நண்பேன்டா” என்கிற நேரடி இசை நிகழ்ச்சியில் தங்கள் இருவரும் பங்கெடுப்பது பற்றியறிந்ததும் மனம் சொல்ல முடியாத வேதனைக்குள்ளாகியதை சகபடைப்பாளி என்கிற வகையிலும், ஒரு தமிழன் என்கிற முறையிலும் உரிமையோடு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
அறுபத்தெட்டாயிரம் மாவீரர்கள் உட்பட மொத்தம் மூன்றரை லட்சம் தமிழர்களை துள்ளத்துடிக்க இழந்து நிற்கின்றோம் அய்யா. இந்த உலகம் நீதி தர தயங்குகிறது. தொடர்ந்து இழுத்தடித்து மழுங்கடிக்கப்பார்கிறது. இந்த பூமிப்பந்தில் எங்கெங்கெல்லாம் சிதறிக்கிடக்கிறோமோ அங்கங்கெல்லாமிருக்கிற அதிகார வர்க்கங்களின் வாசலைத்தேடி ஓடி ஓடி ஓயாமல் போராடிக்கொண்டும், கதறிக்கொண்டுமிருக்கிறோமையா. இந்த ஒப்பாரிகளும் ஓலங்களும் இப்படியே கடந்து விடுமோயென்று பயந்து களைத்து கிடந்த நிலையில்தான் வீரமிக்க யாழ் மண்ணில்” எழுக தமிழ்” என்கிற மிகப்பெரிய எழுச்சிப்பேரணி நடந்து எங்களுக்கெல்லாம் “புத்துயிர்” தந்தது. அந்த “நிமிர்வு” நடந்து முடிந்த சில தினங்களிலேயே இலங்கை அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியினால் “நண்பேன்டா” நிகழ்வு நடத்தி உலகத்தின் பார்வையில் தமிழினம் எப்படி எங்கள் சிங்கள தேசத்தில் ‘மகிழ்ந்து’ கிடக்கிறது பாருங்கள் என உங்கள் இருவரையும் வைத்து நாடகம் நடத்தப்பார்க்கிறது.
அய்யா கங்கை அமரன் அவர்களின் இசையும், அய்யா எஸ்.பி.பி அவர்களின் குரலும் எங்கள் இதயத்தில் அன்றும் இன்றும் என்றும் நிறைந்து கிடப்பவை, காலத்தால் அழிக்க முடியாத காவிய கலைஞர்கள் நீங்கள். அதுவும் அய்யா எஸ்.பி.பி அவர்கள் எங்களின் விடுதலைக்காக பாடிய பாடல்கள் என்றும் மறக்க முடியாதவை. அப்படிப்பட்ட உங்களிடம் இறுதி யுத்தத்தில் “அய்யோ.. அம்மா” என்கிற தமிழ் கதறல்கள் காற்றில் கரைய எங்கள் வீட்டுப் பிஞ்சுக் குழந்தைகளின் கைகால்கழும், சின்னஞ்சிறு இதயங்களும் பிய்ந்து சிதறிய அந்த ரத்தக்கறை படிந்த முள்ளிவாய்க்காலின் மண்ணோடு மானசீகமாக சேர்ந்து நின்று இரு கரம் கூப்பி உரிமையோடு உங்களிடம் கேட்கின்றேன்.
எங்களுக்கு எதிரானவர்கள் நடத்துகின்ற அந்த ”நண்பேன்டா” நிகழ்வில் தயவு செய்து கலந்து கொள்ளாதீர்கள் அய்யா. உங்களிடமிருந்து வரும் நல்ல செய்தியினை கேட்க நான் மட்டுமல்ல இந்த உலகம் முழுக்க வாழுகின்ற தமிழர்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி
இப்படிக்கு
வ. கௌதமன்