இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகள் இவ்வருடத்திற்குள் விடுவிக்கப்படும்: அரசாங்கம்
வடக்கில் இராணுவத்தின் பிடியில் காணப்படும் சகல காணிகளும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுமென காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
காணி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக, தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டே வடக்கில் படையினர் நிலைகொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. தற்போது சுமூகமான சூழல் நிலவுவதால் கடந்த காலத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள கையளிக்கவேண்டியது அவசியமாகும்.
வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுமென தேர்தலின்போது பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார். இதன் பிரகாரம் இவ்வருட இறுதிக்குள் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.