தமிழர்களின் விடுதலைப் போராட்ட உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன
தமிழர்களிடம் உள்ள விடுதலைப் போராட்ட உணர்வுகளை மழுங்கடித்து, தமிழ் மக்களின் ஒன்றுமையை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை தற்போதைய அரசாங்கமும் முன்னெடுத்திருப்பதாக விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
இதனால் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் இன்று நிர்க்கதியாக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்குறிப்பட்டார்.
நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வவுனியா கூட்டுறவு தின நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இதனை தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும், ஏனைய பல அமைப்புக்களும், மாகாணசபையை கொண்டு நடத்துவதில் உள்ள சிரமங்களை எண்ணி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என விவசாய அமைச்சர்பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஜனநாயக ரீதியாக தமிழ் மக்கள் போராடுவதற்கு ஒரு களம் தேவைப்பட்ட போதே மாகாணசபை உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் குறிப்பிட்டார்.
இருப்பினும் மாகாண சபையில் இருப்பவர்கள் அரசியல் பேசக்கூடாது என பலர் கருத்து வெளியிடும் நிலையில், மாகாண சபையில் இருக்கக்கூடிய குறை நிறைகள் மற்றும் மாகாணசபை எதிர்கொள்ளும் பிச்சனைகளுக்கு சர்வதேச ரீதியில் குரல்கொடுக்கக்கூடிய ஒரு முதலமைச்சர் வட மாகாணத்தில் இருப்பதாகவும் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
மாகாண சபை உருவாக்கப்பட்டபோது வடக்கு, கிழக்கு இணைந்திருந்ததாக தெரிவித்த அமைச்சர் ஐங்கரநேசன், இன்று வடக்கு, கிழக்கு துண்டாடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.








