Breaking News

கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மாவீரர் தின நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு



தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி தமது உயிர் நீத்த மாவீரர்களது வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த வணக்க நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி தமிழ் மக்களால் மாவீரர் நாள் அனுட்டிக்கப்படுகின்றது.

எனினும் யுத்தம் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மாவீரர் நாளை அனுட்டிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிளிநொச்சியில் ஸ்ரீலங்கா இராாணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் கடந்த இரு நாட்களாக சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

வடமாகாணசபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த சிரமதானப் பணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் மாவீரர் தினமான இன்று மாலை 06.05க்கு கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெறவுள்ள அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளை அழைப்பு விடுத்துள்ளது.