Breaking News

சமஷ்டிக்கு இடமில்லை; ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை – அரசாங்கம்



புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சிறிலங்காவின் அமைச்சரும், நாடாளுமன்ற சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட அவர்,

சமஷ்டி குறித்து சிலர் பொய்யான பயத்தை நாட்டில் ஏற்படுத்தி இனவாத, மதவாத, அரசியல் நடத்த முனைகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அடிப்படைவாதத்திலிருந்து விடுபட்டு, தமிழ்த் தரப்பினர் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நடுநிலையாக செயற்பட இணைந்துள்ளமை வரவேற்புக்குரியது.

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

1987 இல் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டபோது, நாடு பிரியும், வடக்கு கிழக்கு இந்தியாவின் மாநிலங்களாக மாறும், இங்குள்ளவர்கள் வடக்கு, கிழக்கு செல்வதற்கு நுழைவிசைவு எடுக்க நேரிடும் என அச்சுறுத்தினார்கள்.

அதனை மீறி மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. எனினும் எதுவுமே இன்றுவரை நடக்கவில்லை.

ஐ.தே.க , சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் கூட்டு எதிரணி என்று அனைவரது கருத்துக்களும் பெறப்பட்டே அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

எனவே பொய்யான அச்சம் தேவையில்லை . இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி நாட்டைத் தீவைத்துக் கொளுத்தக்கூடாது. இதில் அரசியல் குளிர் காயக்கூடாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.