Breaking News

சம்பந்தன் ஐயாவுக்கு முதுகெலும்பில்லை! மறைமுகமாக கூறுகிறார் ஆனந்தன்



விடுதலைப்போராட்டம் நடைபெறும் போது உறுதியான தலைமைகள் எங்களிடம் இருந்தது. ஆனால் அது மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக, இராஜதந்திர ரீதியாக தமிழர்களின் பிரச்சனையை சர்வதேசத்திற்கும் இலங்கைக்கும் கொண்டு செல்லக்கூடிய முதுகெலும்பு உள்ள தலைவர் எமக்கு இல்லை என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கவலை வெளியிட்டார்.

வவுனியா கூட்டுறவு தினம் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நேற்று சிறப்பாக இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

நெடுங்கேணி பிரதேசத்தை சிங்கள மயமாக்கும் பல வேலைத்திட்டங்கள் திரை மறைவில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த பிரதேசத்திற்கான பிரதேச செயலாளர் கூட பெரும்பான்மை இனத்தவரை கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது.

வெலிஓயாவுடன் இருக்க கூடிய பல கிராமங்களை நெடுங்கேணியுடன் இணைப்பது மட்டுமல்லாமல் கொக்கச்சான்குளம் என்ற பிரதேசத்தில் தென்பகுதியில் இருந்து குடியேறியுள்ள சுமார் 5000, 6000 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்துடன் இணைத்து,

இங்கிருக்க கூடிய மக்களின் சனத்தொகை மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மை இனத்தவரை இணைக்கும் பலவேலைகள் இடம்பெறுகின்றது.

எல்லை மீள்நிர்ணய குழுவில் கூட நாங்கள் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளோம்.

ஆகவே இப்படியான பிரதேசங்களில் நிலங்களை பாதுகாக்க வேண்டியுள்ளது. அத்துடன் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டிய தேவைகள் இருக்கின்றது.

அத்துடன் 2016 ஆம் அண்டு நிதி அமைச்சராக இருந்த ரவிகருணாநாயக வரவு செலவுத்திட்டத்திலே 200 மில்லியன் ரூபாவை முதற்கட்ட நிதியாக வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதற்குமப்பால் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே இணைத்தலைவர்களாக இருந்த ரிசாட் பதியுதீன், ஆளுனர் சந்திரசிறி, அரசாங்க அதிபராக இருந்த பி.எஸ்.எம். சார்ள்ஸ் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைய வேண்டும் என தீர்மானித்தோம்.



அதற்காக 20 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டதுடன் நில அளவையும் செய்யப்பட்டது. அத்துடன் மாவட்ட மட்டத்தில் நிபுணர்குழு நியமிக்கப்பட்டு அந்த நிபுணர் குழு கூட தாண்டிக்குளத்தில் அமைப்பதால் உள்ள சாதக பாதகம் ஓமந்தையில் அமைப்பத்தில் உள்ள சாதக பாதகம் என்பவற்றை பார்த்து ஓமந்தை என தீர்மானித்தது.

அதேபோலவே இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே எமக்குள்ள பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த பொருளாதார மத்திய நிலையம் விவசாயிகள் பெருவாரியாக உள்ள பிரதேசமான வடக்கை நோக்கி வரவேண்டும் என்றே தீர்மானித்தோம்.

ஆகவே மத்திய அரசாங்கத்திற்கு மிக பெரிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அதாவது பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு இருக்கின்றது.

கடந்த காலத்தில் அது நடைபெறாமல் போனது. ஆகவே தற்போதுள்ள அரசாங்கம் எமது கோரிக்கையை ஏற்கும் என எதிர்பார்க்கின்றோம்.

அந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்படுமாக இருந்தால் இந்த அரசாங்கத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ன அடிப்படையில் வேலை செய்யமுடியும் என சிந்திக்க வேண்டும்.

ஆகவே சம்பந்தன் ஐயா கூறியது போன்று 2016 ஆம் அண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கிடையில் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இருக்கின்றது.

ஆகவே சிறிய சிறிய பிரச்சினைகளை எடுத்து குழப்பங்களை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இன்னும் 50 நாட்கள் பொறுமையாக இருக்கவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. அதனால் நாங்கள் பொறுமையாக இருக்கின்றோம்.

அத்துடன் இந்த அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் கூட போரால் பாதிக்கப்பட்டுள் மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கோ அல்லது இப்பிரதேசத்தின் அபிவிருத்தியை கவனத்தில் எடுத்தோ செய்யப்படவில்லை.

வடக்கு கிழக்கில் இருக்க கூடிய தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மற்றும் அபிவிருத்தியை அல்லது பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்லவில்லை. இது முதலாளி வர்க்கத்திற்கு சார்பாகவும் நலிந்த மக்களுக்கு பாதகமான வரவு செலவுத்திட்டமாகவே அமைந்துள்ளது.

எங்களால் கொண்டு வரப்பட்ட அரசாங்கம் எந்தளவிற்கு எமது அபிவிருத்தியை அல்லது அரசியல் தீர்வு விடயத்தில் அக்கறையாக உள்ளது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். எனினும் சம்பந்தன் ஐயாவின் கோரிக்கைக்காக பொறுத்திருக்க வேண்டியுள்ளது.

லிங்கநாதன் அவர்கள் ஏற்கவே அவ்வாறு 2016 தீர்வு கிடைக்கவில்லை என்றால் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தான் இராஜினாமா செய்வேன் என பகிரங்கமாக தன்னை முன்னிலைப்படுத்தி கூறியிருந்தார்.

ஆகவே 2017 ஆம் அண்டு எங்களுக்கு ஓர் தீர்வு கிடைக்கும் என சம்பந்தன் ஐயா வாக்குறுதி கொடுத்திருந்தார். அதில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை.

நாங்கள் திரும்ப திரும்ப சம்பந்தன் ஐயாவுக்கு சொல்லி வருகின்றோம். இந்த அரசாங்கம் எங்களை ஏமாற்றபோகின்றது. உங்களது காலத்தில் தீர்வை காணவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

மக்கள் உங்களுக்கு தந்த ஆணை மிகப்பெரிய பொறுப்பு இந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியும் தந்துள்ளது.

ஆகவே இதனூடாக எமது மக்களுக்கு எந்த அளவிற்கு வாழ்வாதார உதவியை செய்யமுடியும் அல்லது எமது மக்களுக்கு அரசியல் உரிமையை பெற்றுக்கொடுக்கமுடியுமோ அதற்கான காத்திரமான பணிகளை செய்யவேண்டுமே தவிர,

நாங்கள் பொறுமை காத்து அமைதியாக இருந்தால் யாருமே தங்க தட்டில் வைத்து இதுதான் உங்களுக்கு தீர்வு என தரப்போவதில்லை என கூறியிருக்கின்றோம்.

இந்த அரசாங்கம் எம்மை ஏமாற்றப்போகின்றது என்று தெரியும். எனினும் சம்பந்தன் அந்த பணியை செய்யவில்லை.

ஆகவே 2017 ஆம் ஆண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இந்த பணிகளை எப்படி செய்வது மற்றும் இன்று எமது இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புக்காக அரசியல்வாதிகளை தேடி ஏறி இறங்கும் நிலை காணப்படுகின்றது. ஆகவே இது தொடர்பாக கதைக்கவேண்டும்.

இந் நிலையில் எமக்கு பலமான உறுதியான அரசியல் தலைமை எமக்கு வேண்டும். ஆனால் இன்று எமக்கு அது இல்லை.

விடுதலைப்பேராட்டம் நடைபெறும் போது உறுதியான தலைமைகள் எங்களிடம் இருந்தது.

ஆனால் அது மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக ஜனநாயக ரீதியாக இராஜதந்திர ரீதியாக தமிழர்களின் பிரச்சினையை சர்வதேசத்திற்கும் இலங்கைக்கும் கொண்டு செல்லக்கூடிய முதுகெலும்பு உள்ள தலைவர் எமக்கு இல்லை. ஆகவே உறுதியான தலைவர்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு மக்களிடமே உள்ளது.

தலைவாகள் உருவாகுவார்கள். உருவாக்கப்படும். யாரும் நிரந்தரமானவர்கள் இல்லை.

ஆகவே 2017 ஆம் ஆண்டு தமிழர்களது பிரச்சனைகளை வெளியில் கொண்டு வரக்கூடிய சரியான புதிய அரசியல் தலைமை வேண்டும். அது உருவாகும் என தெரிவித்தார்.