யாருடைய குற்றம்? என்.கண்ணன்
வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் ஒவ்வொன்றையும்,
பிரச்சினைக்குரிய விவகாரமாக மாற்றுவது தென்னிலங்கை அரசியலில் வழக்கமான ஒரு விடயமாகவே மாறியிருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினர் மாத்திரமன்றி, தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களும் கூட வடக்கு மாகாணசபையை குட்டி முந்திக் கொள்வதிலும், குறை சொல்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இடையில் நெருக்கமான உறவும், புரிந்துணர்வும் இருந்தாலும், கூட்டமைப்பின் ஆளுகை யின் கீழ் உள்ள வடக்கு மாகாணசபைக் கும் அரசாங்கத்துக்கும் இடையில் அத்தகைய நிலை இல்லை.
வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்த போது, அது பெரும் எதிர்பார்ப்புக்குரிய விவகாரமாக இருந்தது.
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் காணப்படுகின்ற இடைவெளியை நிரப்பக் கூடியவராக அவர் இருப்பார் என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. ஆனால், கால ஓட்டத்தில், அவரே தென்னிலங்கையுடன் சுமுகமான உறவைப் பேண முடியாத ஒருவராக மாறியிருக்கிறார் அல்லது மாற்றப்பட்டிருக்கிறார்.
இந்த நிலைமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பலவேளைகளில் சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கிறது. உள்ளுக்குள் புயல்களையும் வீசச் செய்திருக்கிறது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில், விக்னேஸ்வரன் மேடையில் அமர்ந்திருந்த போதே, அவரை முதல்வராகத் தெரிவு செய்தது சரியான முடிவு தான் என்று தாம் இப்போதும் கருதுவதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், விக்னேஸ்வரனின் எல்லாக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகளும் இரா.சம்பந்தனுக்கு திருப்தியை அளித்தது என்று கூற முடியாது. அவரது எல்லா செயல்களையும் சம்பந்தன் ஆதரித்தார் ஆதரிக்கிறார் என்றும் இல்லை. ஆனாலும் ஒருமித்த கருத்தில் இருப்பதாக அவர் கூற முனைந்திருந்தார்.
தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் விக்னேஸ்வரனையும், சம்பந்தனை யும் ஒரே தராசில் வைத்து எடைபோடத் தயாராக இல்லை. சம்பந்தன் முற்போக்கான- விட்டுக்கொடுப்புள்ள ஒரு தலைவராக கொண்டாடப்படுகிறார். ஆனால், விக்னேஸ்வரன், நாட்டைப் பிரித்துக் கொண்டு போக வந்த இன்னொரு பிரபாகரனாக, பார்க்கப்படுகிறார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, சம்பந்தனை மிகச்சிறந்த தேசியத் தலைவர் என்று கூறியிருந்தார். அவ்வாறானதொரு புகழாரம், எந்தவொரு சிங்கள அரசியல் தலைவரிடமிருந்தும் விக்னேஸ்வரனுக்கு கிடைக்கவில்லை. கூட்டமைப்பை விமர்சிப்போர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராட்டை, அது இணக்க அரசியலுக்கான பரிசாகவே விமர்சிக்கின்றனர் என்பது வேறு விடயம்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில், பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலேயே தனது ஆட்சியின் பெரும்பாலான காலகட்டத்தை கடந்து வந்திருக்கிறார். இத்தகைய விமர்சனங்களுக்கும், தெற்கில் இருந்து அவருக்கும் வடமாகாணசபைக்கும் எதிராக கிளம்புகின்ற எதிர்ப்புகளுக்கும் தனியே காழ்ப்புணர்ச்சியோ, இனவாதமோ மாத்திரம் காரணம் என்று கூற முடியாது.
கடந்த 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர், முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மிக நெருக்கமான தொடர்பாடல் வசதிகள், வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இப்போது இருக்கிறது. நினைத்த மாத்திரத்தில், வடக்கில் இருந்து தெற்கிற்கு பயணிக்கலாம். அதுபோலவே தெற்கிலிருந்தும் வடக்கே செல்லலாம். போக்குவரத்தும், தொடர்பாடலும், மிக நெருக்கமாக இருந்தாலும், வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்தும் திட்டங்கள் பல ஏற்படுத்தப்பட்டாலும், இருதரப்புக்கும் இடையிலான இடைவெளி என்பது இன்னமும் குறுகி வரவில்லை.
வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம், அதன் செயற்பாடுகள் மீது தெற்கில் ஒருவித பீதியும் அச்சமும் இருந்து கொண்டிருக்கிறது. எங்கே தனியாகப் பிரிந்து சென்று விடுவார்களோ என்ற வீணான பயம் தெற்கில் திணிக்கப்பட்டிருக்கிறது.
இது தான், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் தெற்கிலுள்ள அரசியல் தலைமைகளுக்கும் இடையில் நிலவுகின்ற இழுபறிகளுக்குப் பிரதான காரணம். முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதைக் கூறினாலும் அது விவகாரமாக மாற்றப்படுகிறது. எதனைச் செய்தாலும் அது சர்ச்சையாக்கப்படுகிறது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வடக்கு மாகாணசபை மற்றும் முதலமைச்சர் தொடர்பாக தெற்கில் இருந்து வெளியிடப்பட்ட கருத்துக்களும், செய்திகளும் ஆதாரமற்றவையாக அல்லது திரிபுபடுத்தப்பட்டவையாகவே இருக்கின்றன.
தாம் கூறாத விடயங்கள் தென்னிலங்கை ஊடகங்களில் குறிப்பாக சிங்கள ஊடகங்களில் வெளியாகின்றன என்ற ஆதங்கத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பலமுறை வெளியிட்டிருக்கிறார். அவ்வாறான நிலை இப்போதும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இது மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையில் மாத்திரமன்றி, இரு இனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும் விடயங்களிலும் கூட பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
விக்னேஸ்வரனை கடும்போக்குள்ள ஒரு தலைவராக உருவகப்படுத்துகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையானது சிங்கள மக்கள் மத்தியில் வடக்கு மாகாணசபை மற்றும் விக்னேஸ்வரன் தொடர்பான ஒருவித அச்சத்தையும் எச்சரிக்கை உணர்வையையும் ஏற்படுத்தும்.
அதுபோல, தம்மீது விழுகின்ற சந்தேகப் பார்வை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் வெறுப்பையும் எரிச்சலையுமே ஏற்படுத்தும். இது இடைவெளிகளை நிரப்பும் முயற்சிகளுக்கு முக்கியமான பின்னடைவைத் தருகின்ற ஒரு விடயமாகவே இருந்து வருகிறது.
அண்மையில் பாராளுமன்றத்தில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ வடக்கு மாகாணசபையின் தீர்மானம் ஒன்றை குப்பைக் கூடைக்குள் வீசப்பட வேண்டியது என்று கூறியிருந்தார். வடக்கில் பௌத்த விகாரைகளைக் கட்ட அனுமதிக்கக் கூடாது என்று வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அதுவும் குப்பைக்குள் வீசி எறியப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு மாகாணசபை அத்தகையதொரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. பௌத்தர்கள் வாழாத இடங்களில், சட்டத்துக்கு புறம்பாக, சட்டரீதியான அனுமதியின்றி, தனியார் காணிகளில், இராணுவத்தினரின் துணையுடன் அடாத்தாக புத்தர் சிலைகளை வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானம் மட்டும் தான், வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஆனால், அதனைத் திரிபுபடுத்தி, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராகவும், வடக்கு மாகாணசபைக்கு எதிராகவும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருந்தார் அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ. வடக்கு மாகாணசபையின் தீர்மானத்தை பெற்று, அதனைப் பற்றி அறிந்து விட்டு அமைச்சர் கருத்து வெளியிட்டிருக்க வேண்டும். அவருக்கு அது தெரியாமல் இருந்திருந்தால், பிரதமரோ, ஏனைய அமைச்சர்களோ உண்மையை அறிந்து அவரது கருத்தை மறுத்தலித்திருக்க வேண்டும். அப்படி ஏதும் பாராளுமன்றத்தில் நடக்கவில்லை.
இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுவது போல, வடக்கிற்கான அதிகாரங்களையும், உரிமைகளையும் விட்டுக் கொடுக்க மத்திய அரசாங்கம் விரும்பவில்லை என்பதே அது. அவ்வாறான ஒரு விருப்பம் இருந்திருந்தால், மத்திக்கும் மாகாணத்துக்கும் இடையில் இத்தகைய இடைவெளி ஏற்பட்டிருக்காது.
அண்மையில் வடக்கு மாகாணசபைக்கான மாகாண கீதம் ஒன்றை உருவாக்கும் செயல்முறைகள் குறித்து மாகாணசபை அமர்வின் போது அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிங்கள நாளிதழ் ஒன்று, வடக்கிற்கு தனியான தேசிய கீதம் உருவாக்கப்படவுள்ளதாக செய்தி வெளியிட்டது.
ஏற்கனவே தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட விவகாரமே இன்னமும், கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிங்கள ஊடகங்கள் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றவே முயற்சிக்கின்றன. ஏனைய மாகாணங்களில் உள்ளது போன்ற மாகாண கீதம் ஒன்றை உருவாக்கும் விடயம், இன்னொரு தேசிய கீதம் உருவாக்கப்படுகிறது என்று அபாயச் சங்காக ஊதப்பட்டது.
வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை வெறும் காகிதக் கட்டுகளாகத் தான் இருக்கின்றன என்பது பொதுவான, கருத்து. ஆனால், இந்த தீர்மானங்களை வைத்து தெற்கில் இனவாதப் பிரசாரங்களும், பொய்யான கருத்துக்களும் பரப்பப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. பெரும்பாலான தீர்மானங்கள் விசமத்தனமான முறையிலேயே திரிபுபடுத்தப்பட்டு வருகின்றன.
இது யாருடைய குற்றம்? தீர்மானங்களை நிறைவேற்றும்- முடிவுகளை எடுக்கும் வடக்கு மாகாணசபையினுடைய குற்றமா?- கருத்துக்களை வெளியிடும் முதலமைச்சரின் குற்றமா?- அதனைத் தப்பும் தவறுமாக நினைத்துக்கொண்டு செய்தியாக வெளியிடும் ஊடகங்களின் குற்றமா?- அல்லது தவறாகப் புரிந்து கொண்டு கருத்து வெளியிடும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் குற்றமா?- இல்லை, இப்படித் தான் செய்திகளை வெளியிடுவோம், இப்படித் தான் கருத்துக்களைக் கூறுவோம் என்று இனவாத, நோக்கில் செயற்படும் ஊடகங்கள் மற்றும் அரசியல் தலைமைகளின் குற்றமா?
வடக்கு மாகாணசபையை அச்சத்துடனும் வெறுப்புடனும் பார்க்கின்ற போக்கும், தமிழர்களை இனவாதக் கண் கொண்டு நோக்குகின்ற வழக்கமும், தெற்கில் நீடிக்கின்ற வரையில் இதுபோன்ற நிலை தொடரத் தான் போகிறது.
ஆனால் அதற்காக இந்த நிலைமையைத் தொடர்வதற்கு தமிழர் தரப்பு அனுமதிக்கக் கூடாது. இனங்களுக்கிடையிலான தவறான புரிதல்கள் களையப்படாத வரையில் நிலையான அமைதி சாத்தியப்படாது. அதைவிட தமிழர் தரப்புக் குறித்த தவறான புரிதலை ஏற்படுத்தவும் இடமளிக்கக் கூடாது.
இதனால், வடக்கிற்கு எதிராக தெற்கில் இருந்து எழும்பும் குரல்கள் முதலில் பலவீனப்படுத்தப்பட வேண்டும். அதற்கு தற்போது யாரெல்லாம் திட்டமிட்டோ, தவறாகப் புரிந்து கொண்டோ எதிர்க்கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்களோ அவர்களின் கருத்துக்களின் வலிமையைக் குறைக்க வேண்டும்.
அதற்கு வடக்கு மாகாணசபையும், முதலமைச்சரும், சிங்கள மொழியில் செய்திகளையும் தகவல்களையும் வெளியிடும் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அது அதிகாரபூர்வ கருத்துக்கள் சிங்கள மக்களிடம் சரியாகச் செல்வதற்கு வழியேற்படுத்தும், தவறான புரிதல்களையும் தடுக்கும்.
விடுதலைப் புலிகள் தனிநாட்டுக்காக போராடினாலும், சிங்கள மக்களுக்கு சிங்கள மொழியில் தமது நியாயத்தை கூற முனைந்தார்கள். ஆனால் ஒரு நாட்டுக்குள் வாழத் தயார் என்ற நிலைக்கு வந்திருந்தாலும், தமிழர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் கருத்துக்களை சிங்கள மக்களுக்கு கூறத்தக்க நிலைக்கு இன்னமும் இப்போதைய தமிழ்த் தலைமைகள் வரவில்லை.
இதற்கான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படாமல், தமிழர்கள் தொடர்பாக தவறான கருத்துக்களைத் திரித்துக் கூறும் சிங்களத் தலைமைகளைப் பார்த்து முறைத்துக் கொள்வதாலோ, சிங்கள ஊடகங்களுடன் வம்புக்குச் செல்வதாலோ எந்தப் பயனும் கிட்டாது.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்