Breaking News

வடக்கு கிழக்கில் அமைதியைக் குழப்பும் முயற்சியில் பொதுபலசேனா



கடந்த அரசாங்கத்தினால் வடக்கு கிழக்குப் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் மதுபானங்களும் போதைப் பொருட்களும் கொண்டு வரப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார். 

வடக்கு கிழக்குப் பிரதேசத்திலுள்ள ஸ்திரத்தன்மையைக் குழப்பும் முயற்சியில் பொதுபலசேனா போன்ற சக்திகளை செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதப் போராட்டம் நடைபெற்று வந்த காலப் பகுதியில் பெருமளவிலான இளைஞர், யுவதிகள் ஆயுதப் போராட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர்,

யுத்தத்தின் அச்ச சூழ்நிலை இன்று நீங்கியுள்ளதாகவும் ஆயுதப் போராட்டமும் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான இளைஞர்கள் வேறு திசைகளை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெளிமாவட்டங்களில் இருந்து மதுபான அனுமதிப் பத்திரங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அண்மைக்காலமாக முஸ்லிம் பகுதிகளிலும் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான போதைப் பாவனைகளில் இருந்து தமிழ் இளைஞர், யுவதிகளை விடுவிக்க வேண்டுமானால் விளையாட்டுத் துறைக்குள் உள்வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

கலாசார விழுமிங்களை பாதுகாத்துக் கொள்வதோடு, சமூக சீர்கேடுகளிலும் இருந்து தமிழ் சமூகத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த காலத்தில் சிங்கள பேரிவான அரசுகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் இடம்பெற்ற கலவரங்களினால் தமிழர்களின் உயிர், உடமைகள் பறிக்கப்பட்டதாகவும் பொருளாதார ரீதியில் தாக்கப்பட்டதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறிப்பாக 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் தென்னிலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த இழப்புகளுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் நஷ்டஈடு வழங்குவதாக உறுதியளித்ததாகவும் அது வெறும் வாய்பேச்சாகவே இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். பொது நூலகம் ஐக்கிய தேசிய கட்சியின் காலப் பகுதியில் எரியூட்டப்பட்டதற்கு பிரதியுபகாரமாக வடக்கு கிழக்கில் புதிய பொது நூலகங்களை அமைப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராகவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, யாழ். நூலகம் எரிக்கப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

அவர் மன்னிப்பு கோருவதுடன் நின்றுவிடாது, அந்த நூலகம் போன்று வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதே தரத்தில் நூலகங்களை அமைத்துக் கொடுக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சி செய்த அநீயாயத்திற்கு ஒரு பிரதியுபகாரமாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.