வடக்கில் ரெஜினோல்ட் குரேக்கு ஆயுத பயிற்சி!
வடமாகாண சபையின் தீர்மானத்தை குப்பை தொட்டிக்குள் போடுமாறு தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச வெகு விரைவில் குப்பைத் தொட்டிக்குள் விழுவாரென வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று கடந்த காலங்களில் தற்போதைய வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயை வடக்கிற்கு அழைத்துவந்து ஆயுதப் பயிற்சி வழங்கிய பலர் வடமாகாண சபையில் இன்றும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வடமாகாண சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதம் மாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் விஜயதாஸ ராஜபக்ச அரசாங்கத்துடன் முரண்பட்டு அப்போது எதிர்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு மாறினார்.
அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயதாஸ ராஜபக்சவை தாக்க முற்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றினோம்.
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்ட நிலையில் தற்போது வடக்கு தமிழ் மக்களின் ஆட்சியின் கீழ் உள்ள வடமாகாணசபையின் தீர்மானத்தை குப்பை தொட்டிக்குள் போடுமாறு கூறியுள்ளமை கவலைக்குரியது.
இவ்வாறு கூறியிருக்கும் அமைச்சர் குப்பை தொட்டிக்குள் விழும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அதேபோன்று அன்று பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்த தற்போதைய வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயை வடக்கிற்கு அழைத்துவந்து பாதுகாத்து ஆயுதப் பயிற்சி வழங்கினோம்.
அவ்வாறு ஆயுத பயிற்சி வழங்கியவர்கள் வடமாகாண சபையில் தற்போதும் உள்ளார் என்றார்.