Breaking News

மிலேனியம் சவால் உயர்மட்ட குழு சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சு



அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பிரதி உதவித் தலைவர், பாத்திமா சமர் சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்காவின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும், வறுமையை ஒழிக்கவும், மிலேனியம் சவால் உதவித் திட்டத்தில் சிறிலங்காவை ஐந்து ஆண்டுகளுக்கு சேர்த்துக் கொள்ள, மிலேனியம் சவால் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து பொருளாதார அபிவிருத்தி, மற்றும் வறுமை ஒழிப்பில் ஈடுபடுவது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, உயர்மட்டக் குழுவொன்றை மிலேனியம் சவால் ஒத்துழைப்பு அமைப்பு கொழும்புக்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பிரதி உதவித் தலைவர், பாத்திமா சமர் தலைமையிலான இந்தக் குழுவினர், நேற்று கொழும்பில் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்தனர்.

சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன உள்ளிட்டவர்களை நேற்று மிலேனியம் சவால் அமைப்பின் பிராந்திய பிரதி உதவித் தலைவர் பாத்திமா சமர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

வளர்ச்சியின் மூலம் வறுமையை ஒழித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி மூலோபாயங்கள் குறித்து இந்தச் சந்திப்புகளில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக பாத்திமா சமர் தெரிவித்துள்ளார்.