நல்லாட்சி அரசிலும் தமிழர்களுக்கு தீர்வில்லை! : சிறிதரன் - THAMILKINGDOM நல்லாட்சி அரசிலும் தமிழர்களுக்கு தீர்வில்லை! : சிறிதரன் - THAMILKINGDOM
 • Latest News

  நல்லாட்சி அரசிலும் தமிழர்களுக்கு தீர்வில்லை! : சிறிதரன்  தமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்காது என்பது நல்லாட்சி அரசாங்கத்தில் உதாரணங்களுடன் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குமாரபுரம் படுகொலை மற்றும் ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் விடுவிக்கப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணங்களாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

  நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மருத்துவ (திருத்த) சட்டமூலம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது கடந்த ஏழு வருடங்களாக கண்டுபிடிக்கப்படவில்லை. நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் குறித்த விடயத்தில் முன்னேற்றம் இல்லை.

  இவ்வாறு இருக்கையில் காணாமல் போனவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியமை தமிழ் மக்களை வேதனையடையச் செய்துள்ளது.

  இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துக் கொள்வதை தவிர்த்து சாகும் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கூறவேண்டும்.

  வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட 686 பேர் காணாமல் போயுள்ளனர். இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் தமது கணவன்மார், பிள்ளைகளை ஒப்படைத்தமைக்கான சாட்சியங்கள் காணப்படுகின்றன. காணாமல் போன விடயத்துக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்திருந்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியுள்ளது.

  எனவேதான் சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்டது. எனினும், உள்நாட்டில் விசாரணை நடத்துவோம், இதற்காக காணாமல்போனோர் அலுவலகமொன்றை அமைப்போம் என்ற உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டபோதும் அலுவலகத்தை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை இன்னமும் ஜனாதிபதி வெளியிடாமல் இருக்கிறார்.

  காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை அமைக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிடாது அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றப் போகிறதா| என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நல்லாட்சி அரசிலும் தமிழர்களுக்கு தீர்வில்லை! : சிறிதரன் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top