உச்சக்கட்டத்தில் ஏறு தழுவுதல் ஆதரவுப் போராட்டம் – பணிகின்றன மத்திய, மாநில அரசுகள்
ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக, தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தொடங்கப்பட்ட போராட்டம் உலகளாவிய ஆதரவைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் இதற்கு அதரவான போராட்டங்கள் நடந்து வருகின்றன.
சென்னை மெரீனாவில் ஐந்து நாட்களாக இரவுபகலாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மெரீனா கடற்கரையில் சுமார் 10 இலட்சம் பேர் வரை ஒன்று கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று தமிழ்நாட்டின் ஏனைய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக நேற்று தமிழ்நாடு முழுவதிலும் கடையடைப்பு நடத்தப்பட்டது. வாகனப் போக்குவரத்துகளும் முடங்கியிருந்தன.
தமிழ்நாடு முழுவதும் நேற்று உச்சக்கட்டத்தை எட்டிய போராட்டத்தினால் இந்திய மத்திய அரசும் தமிழ்நாடு மாநில அரசும், அவசர கதியில் ஏறுதழுவுதல் விளையாட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதுதொடர்பான அவசர சட்டம் நேற்று மத்திய சட்ட அமைச்சகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் நேற்றிரவு கிடைத்துள்ள நிலையில் இன்று அல்லது நாளை இந்த அவசர சட்டம் ஆளுனரின் ஒப்புதலுடன் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வரலாறு காணாத இளைஞர்களின் எழுச்சி, கட்டுக்கோப்பான போராட்டமாக நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.