இலங்கை அரச நிர்வாகத்தில் மேற்குலகத் தலையீடு – பீரிஸ் குற்றச்சாட்டு
சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுகளை எடுக்கும் செயற்பாடுகளில் மேற்குலக இராஜதந்திரிகள் தலையீடு செய்து வருவதாக கூட்டு எதிரணியைச் சேர்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குலக சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக, அரசாங்கத் தலைவர்கள், தேசிய பாதுகாப்பு நலன்களை விட்டுக் கொடுக்கின்றனர்.
மேற்குலக ஆட்சியாளர்களுக்கு தேவைப்படும் விதத்தில் இவர்கள் பயணம் செய்கின்றனர்.
அலரி மாளிகையில் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்ச, சாகல ரத்நாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன் ஆகியோர் பங்கேற்ற உயர் மட்டக் கூட்டத்தில், மேற்குலக இராஜதந்திரிகளும் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் குற்றவியல் சட்டம்,பயங்கரவாத தடைச் சட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்வது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
பிரித்தானிய, பிரெஞ்சு, ஐரோப்பிய ஒன்றிய, டச்சு, ஜேர்மன், இத்தாலிய மற்றும் ருமேனிய இராஜதந்திரிகள், சிறிலங்காவின் சட்டங்களை வரையும் கூட்டத்தில் பங்கேற்றது எப்படி என்று அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்.” என்றும் அவர் கோரியுள்ளார்.