தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு சிங்கள பிரதேசத்திற்கு மாற்றம்!
கொழும்பு விசேட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சுமார் 38 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு, சிங்கள பிரதேசமான ஹோமாகமைக்கு திட்டமிட்ட முறையில் மாற்றப்படுவதானது அரசியல் கைதிகளின் விடுதலையை மேலும் இழுத்தடிக்கும் செயலென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிரமலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் வழக்குகளை கொழும்பிற்கு வெளியில் கொண்டுசெல்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சார்ள்ஸ் நிர்மலநாதனிடம் எமது ஆதவன் செய்திச் சேவை வினவியபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
இச் செயற்பாட்டினால் அரசியல் கைதிகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சார்ஸ் நிர்மலநாதன், அவர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளும் தங்களால் ஹோமாகம நீதிமன்றிற்கு வரமுடியாதென சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், பொதுபல சேனா உள்ளிட்ட குழுக்கள், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைப் புலிகளாகவே பார்க்கின்றன என்பதை சுட்டிக்காட்டிய சார்ள்ஸ் நிர்மலநாதன், இதனால் அரசியல் கைதிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அவ்வாறு அரசியல் கைதிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு முற்றுமுழுதாக அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமெனவும் மேலும் குறிப்பிட்டார்.