தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை தவறு – சிவசக்தி ஆனந்தன்
தேசிய அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட மிகப்பெரியத் தவறு என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்ததுள்ளார்.
ஸ்ரீலங்காவின் ஆட்சி மாற்றத்திற்கு உதவிய அமெரிக்கா மற்றும் இந்திய ஆகிய நாடுகளுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றையாவது தமிழ்க் கூட்டமைப்பு செய்திருக்க வேண்டுமெனவும் அவர் வவுனியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியா வடக்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
வவுனியா நயினாமடு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
வரட்சி மற்றும் நீர்ப்பிரச்சினை, விவசாயத்திற்கான நட்டஈட்டினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் பொது மக்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதால் நாட்டின் தென்பகுதியில் குழப்பங்கள் ஏற்படுமென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்றுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டினார்.