Breaking News

ஈராண்டுகால ராஜதந்திரப்போர் -நிலாந்தன்

கடந்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பு கூட்டமைப்பின்
உயர்மட்டத்தை சேர்ந்த ஒருவர் இக்கட்டுரை ஆசிரியரை சந்தித்தார். இந்தியப் பிரதமர் மோடிக்கும் கூட்டமைப்பின் உயர்மட்டத்தினருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பின் போது அவரும் பங்கு பற்றியிருந்தார. அச்சந்திப்பில் உரையாடப்பபட்ட ஒரு விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார். அச்சந்திப்பின் போது சம்பந்தர் மோடியிடம் பின்வரும் தொனிப்பபட ஒருவிடயத்தை அழுத்திக் கூறினாராம். ‘நாங்கள் நாட்டை பிரிக்குமாறு கேட்கமாட்டோம். ஆனால் எமது தாயகம் பிரிக்கப்படாது இருப்பது அதாவது வடக்கு கிழக்கு பிரிக்கப்படாது இருப்பதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்’ என்று இந்த விடயத்தை சம்பந்தர் ஒன்றுக்கு மேற்பட்ட தடைவைகள் திரும்பத் திரும்ப அழுத்தி கூறியதாக மேற்படி கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர் குறிப்பிட்டார்.

அதே கூட்டமைப்பின் முக்கியஸ்தர் இப்பொழுது கூறுகிறார் வடக்கு கிழக்கு இணைப்பு உடனடிக்கு சாத்தியம் இல்லை என்று. அவர் இதை கடந்த பல வாரங்களாக திரும்ப திரும்ப கூறி வருகிறார். அப்படி என்றால் வடக்கு கிழக்கு இணைப்புக்காக இந்தியாவுக்கு ஊடாக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் முயற்சியில் கூட்டமைப்பு வெற்றி பெற முடியவில்லையா? அதாவது அவர்கள் பிரகடனப்படுத்திய ராஜதந்திரப் போர் எனப்படுவது எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடையத் தவறிவிட்டதா?

இந்த இடத்தில் மேலும் சில கேள்விகளை கேட்டகவேண்டும். ராஜதந்திரப் போர் எனப்படுவதை அவர்கள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள்? இனப்பிரச்சனை எனப்படுவது சாராம்சத்தில் ஒரு புவிசார் அரசியல்பிரச்சினை தான் என்பதனை அவர்கள் விளங்கி வைத்திருக்கறார்களா? ஆயின் அதற்குரிய மூலோபாயப் பொறி முறை என்ன? அப்படி ஏதும் பொறி முறை அவர்களிடம் உண்டா? அதை முன்னெடுப்பதற்கு வேண்டிய வெளிவிவகாரக் குழு ஏதும் அவர்களிடம் உண்டா? இந்தியப் பிரதமரோடு உரையாடினால் மட்டும் போதுமா? இது தொடர்பில் முடிவுகளை எடுக்கும் கொள்கை வகுப்பாளர்களை நோக்கி எதும் ‘லொபி’ செய்யப்பட்டதா?

மேற்படி கேள்விகளுக்கு கூட்டமைப்பே பதில் சொல்லவேண்டும். ஆனால் மேற்சொன்ன கூட்டமைப்பின் முக்கியஸ்தர் வடகிழக்கு இணைப்பை முஸ்லீம் மக்கள் ஆதரிக்கவில்லை என்று இப்பொழுது கூறுகிறார். அப்படி என்றால் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கா அல்லது முஸ்லீம்கள் தலைவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கா கூட்டமைப்பினர் மோடியை அணுகினார்கள்? முஸ்லீம் மக்கள் வடகிழக்கு இணைப்பிற்கு ஆதரவாக இல்லை என்றால் இதுதொடர்பில் முஸ்லீம் தலைவர்களோடு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்திருந்திருக்க வேண்டும. ஆனால் அப்படிப்பட்ட உடன்படிக்கைள் எவையுமின்றித்தான் இனப்பிச்சனைக்கான தீர்வைக்குறித்து கடந்த 24மாதங்களாக கூட்டமைப்பு பேசி வருகிறது. முஸ்லீம் தலைவர்களோடு மட்டுமல்ல சிங்களத்தலைவர்களோடும் அப்படிப்பட்ட உடன் படிக்கைகள் எவையும் செய்யப்படாத ஒரு வெற்றிடத்தில் தான் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு குறித்துப்பேசப்படுகிறது.

இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்மொழிவு ஒன்றை கடந்த ஆண்டு தமிழ் மக்கள் பேரவை சமர்ப்பித்திருந்தது. அந்த முன்மொழிவின் அறிமுகத்தில் அவர்கள் ஒரு விடயத்தை அழுத்தி கூறியிருந்தார்கள். யாப்புருவாக்க முயற்சிகளை தொடங்க முன்பு இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கிடையே ஓர் உடன்படிக்கை செய்யப்பட வேண்டும் என்று அதில் குறிப்படப்பட்டிருந்தது. ஆனால் அப்படிப்பட்ட உடன்படிககை எதுவும் சிங்கள, தமிழ், முஸ்லீம்களுக்கிடையே செய்யப்பட்டிருக்கவில்லை. 

அப்படி ஒரு சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டிருந்திருந்தால் அது மூன்று தரப்புக்களுக்குமான பேரம் பேசும் சக்திகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்திருக்கும. அது முத்தரப்புப் பேரம் பேசும் சக்திகளுக்கிடையிலான வலுச்சமநிலையின் மீது எழுதப்பட்ட ஓர் உடன்படிக்கையாக இருந்திருக்கும். ஆனால் அப்படி எந்த ஓர் உடன்படிக்கையும் இலங்கைத்தீவில் எழுதப்படவில்லை. இங்கே வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடையிலான வலுச்சமநிலைதான் உண்டு.

வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்குமிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டது. அதுவும் எழுதப்படாத உடன்படிக்கைதான். அது தொடர்பில் சிங்கப்பூரில் சில சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக சில செய்திகள்; தெரிவிக்கின்றன. இவ்வாறு எழுதப்படாத ஒருகனவான் உடன்படிக்கையின் மீதே யாப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அதிலும் கூட இனப்பிரச்சனைக்கான தீர்வு எனப்படுவது யாப்புருவாக்கத்தின் ஒரு பகுதியாக குறுக்கப்பட்டுள்ளது.

யாப்புருவாக்கம் எனப்படுவது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அல்ல என்றும் காட்டப்படுகிறது. நாட்டின் ஜனநாயக ஆட்சியை பலப்படுத்துவதற்காகவே யாப்பு உருவாக்கப்படுவதாக காட்டப்படுகிறது. கடந்த ஆண்டு நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்ட பொழுது அதற்குரிய முகப்புரை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தன. முகப்புரையில் 3விடயங்கள் இருந்தன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை மாற்றுவது, தேர்தல் முறைமையை மாற்றுவது ஆகிய மூன்றுமே அவையாகும்.. இதில் இனப்பிரச்சசனைக்கான தீர்வு என்றிருப்பதை நீக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கேட்டன. அரசாங்கத்துக்குள்ளும் ஒரு பகுதியனர் அவ்வாறு கேட்டனர். சில மாதகால இழுபறிக்குப் பின் முகப்புரையிலிருந்த அந்த வசனங்கள் நீக்கப்பட்டன .

இவ்வாறு யாப்புருவாக்க முயற்சிகளின் தொடக்கத்திலேயே பலியிடப்பட்டது இனப்பிரச்சினைக்கான தீர்வுதான். வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்குமிடையலான எழுதப்படாத ஒரு புரிந்துணர்வின் மீது தொடக்கப்பட்ட யாப்புருவாக்க முயற்சிகள் அவை. மிக பலவீனமான வலுச்சமநிலை காரணமாகவே யாப்புருவாக்க முயற்சிகள் இழுபடுகின்றன. கூட்டமைப்பினர் மேம்போக்காக பிரகடனப்படுத்திய ராஜதந்திர போர் என்ற ஒன்று மெய்யாகவே முன்னெடுக்கப்பட்டிருந்திருந்தால் தழிழத் தரப்பின் பேரம் அதிகரித்து வந்திருக்கும்.

அல்லது கூட்டமைப்புக்கு எதிரான அதிருப்திகளை ஒருமுகப்படுத்தி நிறுவனமயப்படுத்திய தழிழ்மக்கள் பேரவையாவது அந்த ராஜதந்திரப் போரை முன்னெடுத்திருந்திக்கலாம். அவர்களிடமும் சரியான ஒரு தரிசனம் இருப்பதாக தெரியவில்லை. ஒரு இராஜதந்திர போரை முன்னெடுப்பதற்கான கொள்கைத்திட்ட வரைபு எதுவும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. அதற்கு வேண்டிய கட்டமைப்பு எதுவும் அவரிகளிடமும் இல்லை தமிழ் மக்கள் பேரவையின் பலமே விக்னேஸ்வரன்தான். பலவீனமும் அவர்தான்.

தமிழ் தலைவர்களில் இப்பொழுது ஜனவசியம் மிக்கவராக விக்னேஸ்வரன் திகழ்கிறார். தனக்கு வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக இருக்க முயற்சிக்கிறார். அவருடைய அறிக்கைகள், பேச்சுக்கள், தீர்மானங்கள் நேர்காணல்கள் போன்ற எல்லாவற்றிகூடாகவும் அவர் தமிழ் தேசிய நெருப்பை அணைய விடாது பாதுகாக்கும் ஒருவராக் காட்சியளிக்கிறார். புலம்பெயர்ந்த தமிழர்களால் அதிகம் எதிர்பார்ப்போடு பார்கப்படும் ஒருவராக அவர் காணப்படுகிறார்

ஆனால் அவருடைய தீர்மானங்களில் பல செயலுக்கு போகாதவை. உதாரணமாக இனப்படுகொலை என்ற தீர்மானத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த தீர்மானத்துக்குத் தேவையான ஆதாரங்களை திரட்டுவதற்கான முயற்சிகள் எதையாவது அவர் முன்னெடுத்திருக்கிறாரா? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 7ஆண்டுகளாகி விட்டன. ஆனால் தமிழ் மக்கள் இப்பொழுதும் இறந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் எண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவ்வாறு எண்ணிக்கணக்கெடுப்பதையே ஒரு செயற்பாட்டியக்கமாக முன்னெடுக்கலாம். இது தொடர்பில் உலகளாவிய அங்கிகாரத்தைப் பெற்ற HRDAG-( Human rights Data Analysis Group) மனித உரிமைகளுக்கான தகவல்களை ஆராய்ந்தறியும் அமைப்பு போன்ற அமைப்புக்களின் உதவியை தமிழ் மக்கள் பெற முடியும்.

ஆட்சி மாற்றத்தின் பின் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ள சிவில் வெளியை பரிசோதிக்கும் விதத்தில் செயற்பாட்டியக்கங்களை முன்னெடுக்க விக்னேஸ்வரனால் முடியவில்லை. அறிக்கைகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்புகள் போன்றவற்றில் முன்வைக்கும் துணிச்சலான கருத்துக்களுக்கும் அப்பால் செயலுக்கு போகத்தயங்கும் ஒருவராகவே அவர் காணப்படுகிறார். முதலில் அவர் ஒன்றை தீர்மானிக்கவேண்டும். கூட்டமைப்பின் தலைமை மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் அதிருப்தியாளராக இருக்கப்போகிறாரா? அல்லது ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்கப் போகிறாரா? தமிழ் மக்கள் பேரவையை ஒரு மாற்று அணியாக கட்டியெழுப்புவது தொடர்பில் விக்னேஸ்வரனிடம் அரசியல் தரிசனம் ஏதும் உண்டா?

கடந்த ஆண்டு மட்டக்களப்பில் முத்தமிழ் விழாவில் பேசிய பொழுது தமிழ் மக்கள் பேரவை ஒரு கட்சியாக மாறப் போவதில்லை என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே அதில் தான் இணைந்ததாக உரையாற்றியிருந்தார். அவருக்கு அவ்வாறு ஓர் உத்தரவாதம் வழங்கப்பட்டதாக தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.சில நாட்களுக்கு முன் நெடுந்தீவுக்கான புதிய படகு சேவையை தொடக்கி வைத்த பின் அவுஸ்ரேலியத் தூதுவரோடு உரையாடிய போதும் அவர் இதே கருத்தை மறுபடியும் அழுத்தி கூறியிருக்கிறார்.

அப்படி என்றால் ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்க விக்னேஸ்வரன் தயாரில்லையா? சம்பந்தரின் மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் ஓர் அமுக்கக் குழுவுக்குத்தான் அவர் தலைமை தாங்குவாரா? ஒரு மாற்று அணியைக்குறித்த நம்பிக்கைகள் குறுகிய காலத்துள் அதிகரிப்பதற்குக் காரணமாகவிருந்த அவரே அதற்கு தலைமை தாங்க தாயாராக இல்லையா? இது சில சமயங்களில் தனது அரசியல் பிரவேசத்தைக் குறித்து துலக்கமின்றிக் கதைக்கும் ரஜனிகாந்தை ஞாபகப்படுத்தவில்லையா?

விக்னேஸ்வரன் ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்க தயாராக இல்லாத வரை ராஜதந்திர போர் எனப்படுவது இப்போதிருப்பதைப் போலவே தொடர்ந்துமிருக்கும். பேரவையின் முதலாவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு தீர்வை தமிழ் மக்கள் மீது திணிக்க முடியாது என்பதை பேரவை உணர்த்தியிருக்கிறது என்ற தொனிப்பட உரையாற்றியிருந்தார். ஆனால் யாப்புருவாக்கச் செயற்பாடுகளைப் பார்க்கும் போது அப்படியா தோன்றுகிறது?

இதுதான் பிரச்சனை கூட்டமைப்பிடமும் ஒரு ராஜதந்திர போருக்கான தயாரிப்புக்கள் எவையுமில்லை பேரவையிடமும் அப்படி ஏதுவும் இல்லை இந்நிலையில் வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்குமிடையிலான ஓர் இணக்க அரசியலின் விளைவாக பிறக்கக்கூடிய ஒரு தீர்வு தமிழ் மக்கள் மீது சுமத்தப்படுகையில் அதை யார் தடுப்பது?

இது விடயத்தில் ஈழத்தமிழர்கள் தமிழகத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் எப்படித் தெருவில் இறங்கியது என்பது ஓர் ஆகப் பிந்திய முன்னுதாரணம் ஆகும். ஜல்லிக்கட்டானது தமிழ் பெரும் பரப்பை மறுபடியும் ஒன்றிணைத்திருக்கிறது. 2009 மே மாதத்தில் இருந்து இன்றுவரையிலான காலப்பகுதியில் தமிழகம் மூன்று தடைவை இவ்வாறு கொந்தளித்திருக்கிறது. அவர்கள் ஜல்லிக்கட்டுகாக மட்டும் கொந்தளிக்கவில்லை. 2009மே க்கு பின்னரான தமிழ் பொது உளவியலின் ஒரு வெளிப்பாடே அது. நவீன தமிழில் தோன்றிய ஒரு வீர யுகத்தின் வீழ்ச்சிக்கு பின்னரும் தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருப்பார்கள் என்பதற்கான ஆகப்பிந்திய ஓர் எடுத்துக்காட்டு அது.

கொந்தளிக்கும் தமிழகம் ஈழத்தமிழர்களுக்கு ஒரு முன்னுதாரணம். ஆட்சி மாற்றத்தின் பின்னரான ராஜதந்திரப் போருக்குரிய முக்கிய பேரம் பேசும் சக்திகளில் அதுவும் ஒன்று. கூட்டமைப்பு இதிலிருந்து எதையாவது கற்குமா? அல்லது பேரவை எதையாவது கற்குமா? அல்லது இனிமேலும் அறிக்கைப்போரைத்தான் ராஜதந்திரப்போர் என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களா?



முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்