Breaking News

தமிழ் மக்கள் நிராகரிக்கும் எந்த தீர்வையும் ஏற்கோம்:சம்பந்தன்



தமிழ் மக்கள் நிராகரிக்கும் எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்று கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார்.

காணாமல் போனோர் விவகாரம், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இராணுவம் வசமிருக்கும் பொதுமக்களின் காணிகள் போன்ற பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வொன்று அவசியம் என்றும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா நேற்றைய தினம் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், கட்சியின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

சமஸ்டி தீர்வு தொடர்பில் பேசவும் வேண்டாம் என்றும், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு இல்லாது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்றி தீர்வுக்கான பயணத்தை முன்னெடுக்க முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்றைய தினம் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், புதிய அரசியலமைப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் பொதுமக்களின் சர்வஜன வாக்கெடுப்பிற்கும் விடப்பட வேண்டும் எனறு வலியுறுத்தினார்.