ரணிலுக்கு முதுகில் குத்தமாட்டேன் – மகிந்த
ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத போது  ஆட்சியைக் கவிழ்க்கமாட்டேன் என்றும், எனவே அவர் அச்சமின்றி, பாதுகாப்பாக சுவிற்சர்லாந்து சென்று வரலாம் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பத்தரமுல்லவில் நேற்று நடத்திய ஊடகமாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘பிரதமர் நாட்டில் இல்லாத போது நான் ஆட்சியைக் கவிழ்க்கமாட்டேன். முதுகில் குத்துவது எனது வழக்கம் அல்ல.
ஆட்சிக் கவிழ்ப்பு, எல்லாமே ஜனநாயக முறைப்படி தான் நடக்கும். அதுவும் அவர் நாட்டில் இருக்கும் போதே நடைபெறும். எனவே அவர், அச்சமில்லாமல், சுவிற்சர்லாந்து சென்று திரும்பலாம்.
2017ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டாக இருக்கும். புதிய ஆண்டில், அரசஉடைமைகள் தனியார் மயமாக்கப்படுவது, நாடு பிளவுபடுவது, பொருளாதார தவறுகள், அரசியல் உறுதியின்மை என்பன நீடிக்கும்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்தும் ஆற்றலை நாம் கொண்டிருந்தோம். ஆனால் இப்போதைய அரசாங்கம் அந்த ஆற்றலை இழந்து விட்டது.
நாம் நாட்டின் பெறுமானத்தை அதிகரித்தோம். நாட்டுக்கு மேலதிக நிலத்தையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தோம்.
நாம் ஆரம்பித்து வைத்த திட்டங்களையே இப்போதைய அதிபர் திறந்து வைக்கிறார். பிரதமர் அவற்றை விற்றுக் கொண்டிருக்கிறார்.
குளியாபிட்டியில் வாகனங்களை ஒருங்கிணைத்துப் பொருத்தும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வொக்ஸ்வகன் கார் தொழிற்சாலையா என்பதில் சந்தேகம் உள்ளது.
இந்த தொழிற்சாலையில் உற்பத்தி இடம்பெறாது. பாகங்கள் தான் ஒருங்கிணைக்கப்படும். சில தரமற்ற கார்களை அவர்கள் எமக்கு விற்றுவிடுவார்கள். அவற்றை நாம் ஏற்றுமதி செய்ய முடியாது.
ஏற்கனவே நாட்டில் பல வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலைகள் இருக்கின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 
 
 
 
 
 











