சென்னையின் பல பகுதிகளில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக இன்று சென்னையின் பல பகுதிகளில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
மெரினா கடற்கரையை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறுத்து வருவதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு என போலீசார் இன்று எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் நிலையில் மெரினாவில் உள்ள ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னைவாசிகளும் இன்று போராட்டக் களத்தில் குதித்தனர்.
சென்னை அண்ணா சாலை, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட நகரின் பல முக்கிய சாலைகளில் இன்று பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவ்வழியா கடந்து சென்ற வாகனங்களை வழிமறித்த சிலர், ‘நாங்கள் தமிழர்களாக போராடுகிறோம், நீங்களும் தமிழனாக இருந்தால் இங்கே எங்களுடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து போராடுங்கள். இல்லாவிட்டால், ஓரமாக நின்று வேடிக்கை பாருங்கள் என்று அறிவுறுத்தினர்.