Breaking News

யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரகப் பணியகம்



சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலேயே இந்த தூதரக சேவைகளுக்கான பணியகம் இயங்கவுள்ளது.

இந்த நிகழ்வில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சின் சேவைகளை இந்த பிராந்திய பணியகம் மூலம் பெற முடியும்.

குறிப்பாக, வெளிநாட்டுத் தேவைகளுக்கான பிறப்பு, திருமண, இறப்பு, கல்விச் சான்றிதழ்கள், வெளிநாட்டில் தவிக்கும் இலங்கையர்களுக்கான அவர்களின் குடும்பத்தினரின் உதவிகள், புலம்பெயர் பணியாளர்களின் இழப்பீடுகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியோருக்கான உதவிகளை வழங்குதல் போன்ற சேவைகளை இந்தப் பிராந்திய பணியகம் மூலம் பெற முடியும்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முதல்முறையாக சிறிலங்காவுக்குள் தூதுரக சேவைகளுக்கான பிராந்தியப் பணியகம் ஒன்றை அமைக்கவுள்ளது.

இதுபோன்ற பணியகங்களை தென்பகுதியில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.