சித்திரவதை குறித்த ஐ.நா அறிக்கையை இலங்கை நிராகரிப்பு – பதில் அறிக்கை தயாரிக்கிறது - THAMILKINGDOM சித்திரவதை குறித்த ஐ.நா அறிக்கையை இலங்கை நிராகரிப்பு – பதில் அறிக்கை தயாரிக்கிறது - THAMILKINGDOM
 • Latest News

  சித்திரவதை குறித்த ஐ.நா அறிக்கையை இலங்கை நிராகரிப்பு – பதில் அறிக்கை தயாரிக்கிறது  சிறிலங்காவில் தொடர்ந்தும் சித்திரவதை கலாசாரம் நீடிப்பதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மென்டஸ் சமர்ப்பித்துள்ள அறிக்கையை நிராகரித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் பதில் அறிக்கையை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது.

  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான, மனிதமாபிமானமற்ற, அல்லது இழிவுபடுத்தும் நடவடிக்கைகள், தண்டனைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான, ஜுவான் மென்டஸ், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாத அமர்வில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.

  இந்த அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. சிறிலங்காவின் பல்வேறு பாதுகாப்பு முகவர் அமைப்புகளாலும் சித்திரவதை கலாசாரம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

  இந்த அறிக்கைக்கு வரும் ஜெனிவா அமர்வில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  அதேவேளை, இந்த அறிக்கையை நிராகரித்துள்ள பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர், எந்தவிதமான சான்றுகளும் இல்லாமல் தனிநபர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  இதனை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். எனினும், இந்த அறிக்கையின் எந்தவொரு பரிந்துரைகளுக்கும் இணங்க முடியாது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

  இந்த அறிக்கையில் காவல்துறையினரின் சித்திரவதைகளையே பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு காவல்துறையினரால் எவரேனும் சித்திரவதை செய்யப்பட்டிருந்தால், அந்த நபர் நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்படும் போது அதுபற்றி முறையிட முடியும். ஆனால் எவரேனும் அவ்வாறு செய்யவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

  வரும் பெப்ரவரி 27ஆம் நாள் ஆரம்பமாகி, மார்ச் 24ஆம் நாள் வரை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வில் ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் இந்த அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சித்திரவதை குறித்த ஐ.நா அறிக்கையை இலங்கை நிராகரிப்பு – பதில் அறிக்கை தயாரிக்கிறது Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top