Breaking News

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா, ஜப்பானுடன் பேச்சு – ரணில்

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுர- சாலியபுரவில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“சீன முதலீட்டுத் திட்டங்களின் மூலம் அம்பாந்தோட்டையையும், கொழும்பு நிதி நகரத் தையும் அபிவிருத்தி செய்வது போலவே, திருகோணமலை மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருகிறது.

திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டால் அனுராதபுர, ஹொரவபொத்தாளை இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற முடியும்.

எந்த எதிர்ப்புகள் வந்தாலும், சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படும்.

ராஜபக்ச அரசாங்கம் பெற்றுக்கொண்ட பாரிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சீன அதிபருடன் பேசி, சீனாவின் உதவியுடன் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்தவர்களே இன்று அதனை எதிர்க்கிறார்கள்.

இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் பொருளாதார நிலைகளைப் பொறுத்தவரையில், கம்போடியா, லாவோஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் தான் சிறிலங்காவை விட பின்தங்கி இருக்கின்றன.

மகிந்த ராஜபக்ச இன்னொரு தடவை ஆட்சிக்கு வந்திருந்தால் ஆப்கானிஸ்தானும் கூட சிறிலங்காவை முந்திக்கொண்டு போயிருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.