Breaking News

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?



அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்ற ஒரு மில்லியன் சீனர்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளதாக, ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டிருந்த தகவலை சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க கொழும்பில் நடத்தியிருந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ள சீனாவின் திட்டங்களில் பணியாற்றுவதற்கு, ஒரு மில்லியன் சீனர்கள் நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறியிருந்தார்.

இதுகுறித்து நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன,

“சிறிலங்கா அரசாங்கத்துக்கு அத்தகைய கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை.

அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் தொடர்பான உடன்பாடுகளில், சீனர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான நிபந்தனைகள் ஏதும் இல்லை.

எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இது ஒரு தேசிய செயற்பாடு ஆகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.