Breaking News

முல்லைத்தீவில் மீனவர் உடைமைகளுக்கு சேதம்; மீன்பிடிப்படகு எரியூட்டப்பட்டுள்ளது

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் மீனவர்களுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் சேதமாக்கப்பட்டு மீன்பிடிப்படகு ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது.


தண்ணிமுறிப்புக்குளத்தில் இரண்டு மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்த போதிலும் வெலிஓயா பகுதியில் இருந்து வரும் நபர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளூர் மீனவர்களின் உடைமைகளை சேதப்படுத்தி, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு
வெலிஓயா பகுதி மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தண்ணிமுறிப்புக்குளத்தில் உள்ள இரண்டு மீனவர் சங்கங்களிலும் பதிவு செய்தவர்களே இங்கு மீன்பிடியில் ஈடுபடலாம் என இதன்போது நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதன் பின்னர் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சென்றிருந்த வெலிஓயா பிரதேசத்தினைச் சார்ந்தவர்கள் தம்மையும் குறித்த குளத்தில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோரி முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

மாவட்ட செயலாளர் தலைமையில் இரு பிரதேச செயலாளர்கள், மீனவர்களை அழைத்து முடிவெடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட செயலாளர் தலைமையிலான கூட்டத்தில் வெலிஓயா பகுதி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட முடியாது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே மீனவர்களின் உடைமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.