Breaking News

கூட்டமைப்பை ஏமாற்றமடையச் செய்த இந்தியா




வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு, சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக, பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது-

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்க இந்திய அரசு வலியுறுத்தாது என இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை இலங்கை ஜனாதிபதியைச் சந்திக்கும் முன்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜெய்சங்கர் சந்தித்தார். அப்போது, வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பை இந்தியா இனிமேலும் வலியுறுத்தாது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டபோது, “இது 30 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு விடயம். ராஜீவ் காந்தி கொலை உள்பட பல்வேறு விடயங்கள் நடந்து முடிந்து விட்டன. அதனால், தற்போது நடைமுறை சாத்தியமாக எது முடியுமோ அதைச் செய்ய வேண்டும்,” என்று ஜெய்சங்கர் கூறியதாக அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், வடக்கு – கிழக்கு இணைப்பைக் கைவிட வேண்டும் என்று தான் கூறவில்லை என்றும் வெளியுறவுச் செயலர் கூறியதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழ்நிலையில், வடக்கு – கிழக்கு இணைப்புத்தான் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பானது என்று கூறிய சுரேஷ் பிரேமச்சந்திரன், ஏற்கெனவே இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் சீனாவுக்கு சாதகமானதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது தங்களுக்கு இணக்கமான ஓர் அரசாங்கம் ஏற்பட்டிருப்பதால் அதை சங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என இந்தியா கருதலாம் என்று கருத்துத் தெரிவித்தார்.

ஆனால், தங்களது கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தப் போவதாகவும், தமிழ் மக்கள் அதற்காகத்தான் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து, தமிழக மக்களும், அரசியல் தலைவர்களும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

இந்த விடயம் குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனிடம் கேட்டபோது, “ஏற்படுத்த முடியாது என்று வெளியுறவுச் செயலர் கூறவில்லை. 1987-ஆம் ஆண்டு உடன்படிக்கைக்குப் பிறகு, நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அதற்கு ஏற்றவாறு, மாற்று யோசனையைப் பரிசீலிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று வெளியுறவுச் செயலர் கூறினார்,” என்றார்.

அதே நேரத்தில், இலங்கை – இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு யாரும் சொல்லவில்லை என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.