Breaking News

ஜெனிவாவில் இன்று காலஅவகாசம் கோருவார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று உரையாற்றவுள்ளார். இதன்போது, 2015ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேலதிக காலஅவகாசத்தை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை, ஜெனிவா நேரப்படி இன்று காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இவர் தனது உரையில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், நீதியை நிலைநாட்டவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பாக விளக்கமளிப்பார்.

அத்துடன் நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகள் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேலதிக கால அவகாசத்தையும் அவர் கோரவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று காலை உரையாற்றிய பின்னர், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனையும் சந்தித்துப் பேச சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர திட்டமிட்டுள்ளார்.

அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக, ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதரகம் ஒரு உப மாநாடு ஒன்றை நாளை நடத்தவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் தலைவர் மனோ தித்தவெல ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சிறிலங்கா சார்பில், மங்கள சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத ஆரியசிங்க, மற்றும் மனோ தித்தவெல ஆகியோர் நேற்று பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.