Breaking News

பிரபாகரன் பெற்றுத்தராத ஈழத்தை வேறு யாராலும் பெற்றுத்தர முடியாது

தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அதில் விமர்சிக்க எதுவுமில்லை என மட் டக்களப்பு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒற்றையாட்சி மூலம் தீர்வு பெறப்படும் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்து வரும் கருத்தை பலர் விமர்சிப்பது பொருத்தமற்றது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெற்றுத்தரப்படாத ஈழத்தை வேறு யாராலும் பெற்றுத்தர முடியாது.ஈழம் என்று கூறிக்கொண்டு இருக்கின்ற அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் இன்னமும் எஞ்சியிருக்கின்றவற்றை இழக்கின்ற சூழலை உருவாக்கக் கூடாது.

மாற்றினத்தை வாழ வைத்து, தமிழினத்தைத் தாழ வைக்கும் செயற்பாடுகளில் இனிமேலும் ஈடுபடாமல் தமிழினத்தையும் வாழ வளம்பெறச் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தற்கால சூழலுக்கு ஏற்றவகையில் செயற்பட வேண்டியுள்ளது.

கடந்த காலத்தில் ஈழம் என்ற நோக்கத்தோடு செயற்பட்டதனால்தான் புல்லுமலை, தாந்தாமலை, குடும்பிமலை போன்ற பகுதிகளில் சிற்றூழியர்களைக்கூட பெறமுடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே இவ்வாறான நிலைமைகளை நன்கு அறிந்த எமது தலைவர் சம்பந்தன், ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுக்காக முயற்சிக்கின்றார்.கேப்பாப்பிலவு கிராம மக்கள் கடந்த யுத்ததினால் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது அம்மக்களின் சொந்த நிலத்தில் மீளக் குடியமர விரும்புகின்றார்கள்.

இதற்கு நல்லாட்சி அரசாங்கம் இதுவரையில் செவிசாய்க்காத நிலையில் பொறுமையை இழந்த மக்கள் கடந்த 3 வாரங்களாக உணவு, உறக்கம் இன்றியும் மழையிலும் வெயிலிலும், இரவு பகல் பாராது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த மக்களின் போராட்டம் நியாயமானது. மக்கள் அவர்களது சொந்த நிலத்தைக் கேட்டுத்தான் போராடி வருகின்றார்கள்.

நல்லாட்சி கடந்து இரண்டு வருடங்களாகியும் அரசாங்கம் பொதுமக்களின் காணியை விடுவிக்காமலிருப்பது கவலையளிக்கிறது.நல்லாட்சியைக் கொண்டு வந்தவர்கள் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மை இனமக்கள்.கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்தை இந்த நல்லாட்சி அரசாங்கம் கண்டு கொள்ளாமலிருப்பது கவலையளிக்கின்றது.இந்த நாட்டிலுள்ள ஏனைய மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத் தான் அன்றிலிருந்து இன்றுவரை நாம் செயற்பட்டு வருகின்றோம்.

நாங்கள் பிரிவினவாதத்தை விரும்பவில்லை, அவ்வாறு நினைத்திருந்தால் அன்றிருந்த சேர் பொன.இராமநாதன், சேர் பொன். அருணாச்சலம் போன்றோர் இந்நாட்டைக் கூறுபோட்டிருப்பார்கள்.

1947 ஆம் ஆண்டுக்குப்பின் இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களை கல்வி, கலை கலாசாரங்கள் போன்ற அனைத்து விடயங்களிலும் புறக்கணித்தே வந்தது.

இதன்காரணமாகத்தான் காலிமுகத்திடல் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரைக்கும் எமது தலைவர்கள் போராடினார்கள்.

ஒருசிலர் சந்தர்ப்பவாத அரசியல் செய்வது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாத அரசியல் செய்யவில்லை. நாங்கள் தமிழினத்தின் உரிமையைத்தான் கேட்கிறோம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.