Breaking News

தமிழ் மக்கள் பேரவைக்கு கடுமையான பொறுப்புக்கள் உண்டு

அரசியலில் இருந்தால்தான் மக்களுக்குப் பணி செய்ய முடியும் என்பது ஒரு நிபந்தனையல்ல.

அரசியலில் ஈடுபடாமல் - தேர்தல் கலாசாரத்துக்குள் விழுந்து எழும்பாமல் மக்கள் பணி செய்தவர்கள் ஏராளம். இவர்களை இன்றும் உலகம் புனிதர்களாகப் போற்றித் துதிக்கின்றது.

இந்திய தேசத்துக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த அண்ணல் காந்தி அடிகள் ஆட்சி அதிகாரத்தை வெறுத்தார். தேர்தல் கலாசாரத்தை தவிர்த்தார். இதனால் இன்றுவரை அவரைப் பாரத பூமி தொழுது போற்றுகிறது.

இதுதவிர பகுத்தறிவின் தந்தை ஈ.வே.ரா.பெரியார் தேர்தல் களத்தில் நின்றவர் அல்லர். மாறாக மக்களைத் தேடிச் சென்று அவர்கள் மத்தியில் பகுத்தறிவை விதைத்தார்.இதனால் தமிழகம் அறியாமை எனும் இருளில் இருந்து விடுதலை பெற்றது.

இவ்வாறு அரசியல் என்ற களத்தை புறந்தள்ளி மக்கள் பணி செய்தவர்கள் பலரைக் குறிப்பிட முடியும். இத்தகையவர்கள் அரசியல் சார்ந்தவர்கள் என்று மக்கள் நினைத்ததும் உண்டு.

இவ்வாறான நினைப்புக்கு காரணம் அவர்களைச் சுற்றி அரசியல்வாதிகளும் கட்சிகளும் வலம் வந்தமை என்று கூறிக் கொண்டாலும் இதனையும் கடந்து அரசியலைத் தீர்மானிக்கின்ற மாபெரும் சக்திகளாக இவர்கள் இருந்தமை என்று கூறுவதே உண்மையானது.

அதாவது தூய்மையான மக்கள் பணிசெய்த இவர்கள் யாரை அடையாளம் காட்டுகின்றனரோ அவர்களை ஆட்சிப்பீடத்தில் அமர்த்துவதற்கு மக்கள் தயாராக இருந்தனர்.

உதாரணத்துக்கு ஒன்றைக் கூறலாம். ஈ.வே.ரா. பெரியார்யாரை தேர்தலில் வெற்றி பெறுக என்று ஆசிர்வதிக்கின்றாரோ அவரை தேர்தலில் வெற்றி பெறச் செய்யும் கடமையை தமிழக மக்கள் நிறைவேற்றினர்.

இவ்வாறான வெற்றியை அறிஞர் அண்ணாதுரை அவர்கள் கூட பெற்றிருந்தார் என்ற வரலாறுகளை நாம் பார்க்க முடிகின்றது.இந்த வகையில்தான் அரசியல் என்ற சூழமைவைக் கடந்து மக்கள் பணி செய்ய முடியும் என்பது நிருபணமாகிறது.

தமிழ் மக்கள் பேரவையும் இத்தகைய தன்மை கொண்டதே. இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் பேரவைக்கு மிகுந்த பொறுப்புக் கள் உண்டென்பது மறுக்க முடியாத உண்மை. 

தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சார்ந்த தெளிவை ஏற்படுத்துவது; ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்குக் காலஅவகாசம் வழங்கப்படுமாயின் அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதகத் தன்மையை வெளிப்படுத்துவது; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறான அணுகுமுறைகளையும் அரசியல் நகர்வுகளையும் சுட்டிக் காட்டுவது; சரியானவற்றை வரவேற்பது; தமிழ் மக்களின் வாழ் விடங்களை மீட்பது என்றவாறு பல்வேறு பொறுப்புக்களைச் செய்ய வேண்டிய கடமைப்பாட்டில் தமிழ் மக்கள் பேரவை உள்ளது என்பதற்கு அப்பால்,

தேர்தல் மூலமான தமிழ் மக்களின் அரசியல் தலைமையைத் தீர்மானிக்கின்ற சக்தியையும் தமிழ் மக்கள் பேரவை கொண்டிருக்கும் போதுதான் எங்கள் இனத்தின் விடியலும் எதிர்பார்ப்பும் இலகுவாகும் என்பது சர்வநிச்சயம்.