Breaking News

பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக வடமாகாண தழுவிய போராட்டம் நடாத்தத் திட்டம்!



கடந்த 31ஆம் நாளிலிருந்து தமது நிலத்தை மீட்பதற்காக கேப்பாப்புலவு – பிலவுக் குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த மக்கள் கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்திற்கு முன்னால் தற்காலிகக் கொட்டகை அமைத்து மழை, வெயில், பனிக்குள் கைக்குழந்தை தொடக்கம் முதியவர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வடக்கு மாகாணம் தழுவிய போராட்டமொன்றை முன்னெடுப்பதற்காக வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இம்மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக வடக்கிலும், கிழக்கிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் தென்மாகாணத்தைச் சேர்ந்த சில அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அத்துடன், இம்மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளபோதிலும், தமது மண்ணில் காலடி எடுத்துவைக்கும் வரைக்கும் தாம் ஓயப்போவதில்லையென அம்மக்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.