Breaking News

இது நல்லாட்சி அரசாங்கமா? தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புதுக்குடியிருப்பு மக்கள்



பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பதினெட்டாவது நாளை எட்டியுள்ள அதேவேளை சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் கடந்த மூன்றாம் திகதி முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 49 பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்தே, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர்.

எனினும் கடந்த 9 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதும் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை.

இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக மாத்திரம் தமிழர்களை அனுசரித்ததாக மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.