தமிழீழத் தேசியத்தலைவர் கொல்லப்பட்டதை நினைத்து மனவருத்தமடையும் சந்திரிக்கா??
தமிழீழ விதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடித்தமை குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மனவருத்தமடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்று முற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய அவர், ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்துவிட்டு, திரும்பியபோது ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைத்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,
இராணுவத்தினர் வடக்கிலுள்ள பெண்களை துஸ்பிரயோகம் செய்ததாக சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.
எந்த அடிப்படையில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்? இவ்வாறு கூறுவதற்கு அவருக்கு இருக்கும் உரிமைதான் என்ன?
லஞ்ச ஊழல் ஆணைக்குழு மோசடி நிறைந்தது என்றும், பொலிஸ் நிதிமோசடி பிரிவு அதிகாரிகள் ராஜபக்சவிடம் இருந்து பணம் இலஞ்சம் பெற்றிருப்பதாகவும் சந்திரிகா குமாரதுங்க ஊடகங்களுக்கு முன்பாக வந்து கூறுகின்றார்.
நிதிமோசடி பிரிவு அதிகாரிகளுக்கு பலம் இருந்தால் இந்தக் கூற்றை வைத்து உடன் விசாரணையை ஆரம்பியுங்கள்.
தேர்தல் காலங்களில் லம்போ கினி, தங்கக் குதிரை, அமெரிக்காவில் பக்கிங்கம் மாளிகை தொடர்பாகவும் 18 பில்லியன் டொலர் பற்றியும் பொய்களை அலங்கரித்தவர்கள் அவை பொய்தான் என்று ஊர்ஜிதமாகிவரும் நிலையில் மேலும்பல பொய்களை உருவாக்குகின்றனர்.
எனவே சந்திரிகா மேடம் நீங்கள் இந்த நாட்டிற்கு கூறிய பொய்கள் போதும். இப்போது நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சியுங்கள்.
விலைவாசி உயர்வது சந்திரிகா அம்மணிக்கு பிரச்சினை இல்லாவிட்டாலும் மக்களுக்கு அது பிரச்சினையாகும்.
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்தமை மற்றும் பிரபாகரனை கொன்றதையிட்டு சந்திரிகா குமாரதுங்க இன்று மனவருத்தமடைகிறார். கவலையடைகின்றார்.
நல்லாட்சி அரசாங்கமும் பிரபாகரனின் மறைவையிட்டு கவலையடைகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கொழும்பில் கடமைபுரியும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை கடந்தவாரம் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இராணுவத்தினர் வடக்கிலுள்ள பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.