Breaking News

சுதந்திர போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வட மாகாணசபை முயற்சி



சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை ஒன்றை வடக்கு மாகாணசபை உருவாக்குவதற்கான சட்டரீதியான சாத்தியப்பாடுகள் உள்ளனவா என்று, ஆராயப்படும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

2015 செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைக்கமைய, அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையை உருவாக்கத் தவறினால், சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை ஒன்றை வடக்கு மாகாணசபை உருவாக்குவதற்கான சட்டரீதியான சாத்தியம் உள்ளதாக என்று ஆராயப்படவுள்ளது.

மன்னார்- வட்டக்கண்டல் பாடசாலையில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வில் உரையாற்றிய போது வட மாகாண முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1985ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள், வட்டக்கண்டல் தமிழ் கலவன் பாடசாலையில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில், பாடசாலை அதிபர், சுந்தரமூர்த்தி, ஆசிரியர்களான மகேந்திரன், இரத்தினதுரை ஆகியோர் உள்ளிட்ட 70 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்தப் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்றுமுன்தினம் வட்டக்கண்டல் பாடசாலையில் இடம்பெற்றது.

இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவின் அழைப்பின் பேரில் பங்கேற்றிருந்தார்.

இந்த நினைவு நிகழ்வை வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரே ஒழுங்கு செய்திருந்தார். அவரது சகோதரியின் கணவரான ஆசிரியரும் வட்டக்கண்டல் படுகொலையில் உயிரிழந்திருந்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைக் குழுவொன்றை அமைப்பதற்கான சட்ட ரீதியான சாத்தியப்பாடு உள்ளதா என்று, அறிக்கை மற்றும் யோசனை ஒன்றை சமர்ப்பிக்குமாறு சட்டவாளரான, எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா,

வட்டக்கண்டல் படுகொலை நிகழ்ந்த 32 ஆண்டுகளாகி விட்டன. ஆனால் இன்னமும், எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை. இந்தக் கொலைகளை செய்த இராணுவத்தினர் தண்டிக்கப்படவுமில்லை.

அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களின் துணையுடன் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக பங்களிப்பை தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது.

வட்டக்கண்டல் படுகொலை போன்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதில் ஆர்வம் காண்பிக்கப்படவில்லை. இதனால் நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை இல்லை.

எனவே, தான் மாகாணசபை இந்த முயற்சியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.” என்று குறிப்பிட்டார்.