Breaking News

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய கண்டனப் போராட்டம்

ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம், யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 09 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், யாழ்.மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம், திருகோணமலை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், ஸ்ரீலங்காவில் உள்ள பெரும்பான்மையின மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை நல்லாட்சி அரசே எமது நிலமே எமது வாழ்வு, இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள எமது காணிகள் உடனே விடுவிக்கப்பட வேண்டும், பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு தீர்வு என்ன? என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியுள்ளதுடன் கோசங்களையும் எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.