Breaking News

தாய்நிலத்துக்கான மக்களின் குரலோடு அனைவரும் இணைவோம்

ஸ்ரீலங்கா  இராணுவம் மற்றும் விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீளக்கையளிக்க கோரி, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு  மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை  அறிவித்துள்ளது.


நீதியிலும் மனித உரிமையிலும் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து மக்களையும்  இன,மத, பிரதேச வேறுபாடின்றி  நீதிக்காக போராடும் மக்களின் குரலுக்கு ஆதரவு வழங்குமாறும் தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரு தனிப்பட்ட பிரதேசத்தின் நிலத்துக்கான பிரச்சினை என்கிற பரிணாமத்தை தாண்டி  ஒட்டுமொத்த நில ஆக்கிரமிப்புகளுக்கெதிரான தமிழ் மக்களின் போராட்டத்தின் ஒரு குறியீட்டு வடிவமாக கேப்பாபிலவு மக்களின் போராட்டம்  மாற்றமடைந்துள்ளது.

எவரிலும் தங்கியிராது, தமது நியாயமான இலக்கில் எந்தவித விட்டுக்கொடுப்பின்றி தமது பிரச்சினைக்கு மக்கள் தாமாகவே அணிதிரண்டு குரலெழுப்ப முன்வந்திருப்பது  எமது இனம் கடந்து வந்த பயணத்தில் மிக முக்கியமானதொரு அம்சமாகும்.

மக்கள் மயப்படுத்தப்பட்ட அறப்போராட்டங்களின்  நம்பிக்கை தருகின்ற ஒரு முன்னோடிச்செயற்பாடாகவே தமிழ் மக்கள் பேரவை இதனைப் நோக்குகின்றது.

நில அடையாளத்தை சிதைப்பதற்கு எதிரான உரிமைக்குரல்களையும் காணாமல் போகச்செய்யப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கான நீதிக்கான குரல்களையும்   எமது அரசியல் அபிலாசைகளுக்கான குரல்களையும் இன அழிப்புக்கெதிரான  ஒரு கூட்டுக்குரலாகவே சர்வதேச நாடுகள் கருதவேண்டும் என தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

வடமாகாணத்தில் 66,000 ஏக்கர் நிலம் ஸ்ரீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாடுகளின் அழுத்தம் இன்றி எமது மக்களுக்கான நீதியான தீர்வு கிடைக்கப்போவதில்லை . 

எமது மக்கள் தமது சொந்த நிலத்துக்கு திரும்புவதற்கான  அழுத்தங்களையும் வழிமுறைகளையும் சர்வதேச நாடுகளும் ஐ.நா. மனித உரிமைப்பேரவையும் துரிதப்படுத்தவேண்டும் எனவும் தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.