Breaking News

நில மீட்பு போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலுக்கு அழைப்பு

பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நாளை (செவ்வாய்க்கிழமை) நடத்த தீர்மானித்துள்ளதாகவும், அந்த கலந்துரையாடலில் பொது அமைப்புக்களை கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


இதுதொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

நில ஆக்கிரமிப்புக்கெதிரான குறியீட்டு வடிவமாக மாறியுள்ள கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏறத்தாழ ஒரு மாதத்தினை எட்டியுள்ளது.

தமது கொள்கையில் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் அந்த மக்கள் சுய எழுச்சியுடன் முன்னெடுத்துள்ள இந்த நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி மேலும் மக்கள் மயப்படுத்த வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

இது குறித்து தமிழர் தாயகப்பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்கள் அமைப்புகளுடனான கலந்துரையாடல் ஒன்றிற்கு நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு பலாலி வீதி, கோண்டாவிலில் அமைந்துள்ள சேவாலங்கா நிறுவன கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு அனைத்து பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்மக்கள் பேரவையினர் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.