தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற காணிகள் விடுவிக்கப்படும்: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்
வடக்கு கிழக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென கருதும் பிரதேசங்களிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 33 ஆயிரத்து 584 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளதென குறிப்பிட்ட ராஜாங்க அமைச்சர், மேலும் மூவாயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பாகவும் இதன்போது ராஜாங்க அமைச்சர் கருத்துத் தெரிவித்தார். காணாமல் போனோர் குறித்த விசாரணைகள் சில வேளைகளில் வருடக்கணக்கிலும் செல்லலாமென தெரிவித்த ராஜாங்க அமைச்சர் ருவான், இந்த விடயத்தில் காலக்கெடு வழங்க முடியாதென குறிப்பிட்டார்.
எவ்வாறெனினும், காணாமல் போனோர் விடயத்தில் வினைத்திறன் மிக்க தீர்வுகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாவும் அதனடிப்படையிலேயே காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.