இரண்டு வாரங்களைத் தாண்டியும் தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்
சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 14ஆவது நாளை எட்டியுள்ளது.
கேப்பாப்பிலவு- பிலக்குடியிருப்பைச் சேர்ந்த மக்கள், சிறிலங்கா விமானப்படை முகாமுக்கு முன்பாக, தமது குடும்பங்களுடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று 14 ஆவது நாளை எட்டியுள்ளது.
முகாமுக்கு முன்பாக தற்காலிக தகரக் கொட்டகை அமைத்தும், கட்டாந்தரையிலும் இவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக அமர்ந்திருந்து அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எனினும், இவர்களின் காணிகள் விடுவிப்புத் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இதனிடையே, புதுக்குடியிருப்பிலும், தமது காணிகளை விடுவிக்கக் கோரி, பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று 10 ஆவது நாளாகப் போராட்டம் இடம்பெறுகிறது.
கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, மட்டக்களப்பில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.