Breaking News

உலகிற்கு உரத்து கூறுகிறேன் விசாரணை இல்லை-மைத்திரிபால(காணொளி)


யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நடைபெற்ற
மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு மீதும் அரசாங்கத்தின் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், பிரேரணைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையை நான் தெளிவாகக் கூற வேண்டும். இதனை நான் உலகிற்கு கேட்கும் வண்ணம் தெளிவாக கூறுகின்றேன். எனது கொள்கையின் படி இந்த நாட்டின் எந்தவொரு படை வீரரையும் பிரதிவாதியாக்க நான் தயாரில்லை. உலகின் பிரபல அரச தலைவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் உறுதி வழங்கியுள்ளனர்.

எமது நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகள், அதேபோன்று படையினர் தொடர்பிலான விடயங்களில் பிரச்சினை ஏற்படுவதற்கு இடமளிப்பதில்லை என அவர்கள் எனக்கு தனிப்பட்டவகையில் உறுதி வழங்கியுள்ளனர். அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்துடன் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


தாய்நாட்டுக்காக போராடிய வீரமிகு படையினரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகுமென தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் வீரமிக்க படையினர் தொடர்பில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாம் பொறுப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார்.



இதற்கு முன்னர் ஒருபோதும் இருந்திராத சர்வதேச நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இந்த யுகத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் அதன் பயன் என்னவென சிலர் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, இந்த சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை நாட்டினதும் மக்களினதும் கௌரவத்தையும் வீரமிக்க படையினரையும் பாதுகாப்பதற்கு பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிய படை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் போர் வீரர்கள் தொடர்பில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினைக்காகவும் தாம் பொறுப்புக் கூறுவதாக அனைவரிடமும் தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் தேசிய பாதுகாப்புடன் தொடர்பற்ற விடயங்களில், அதாவது ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்களின் கொலை, தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் யாராவது ஒருவர் தவறிழைத்திருந்தால், அவர் எந்த தரத்திலிருந்தாலும் அவரை பாதுகாக்கும் இயலுமை தமக்கு இல்லையென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்..