Breaking News

அமெரிக்காவே தீர்மானத்தை முன்வைக்கிறது – இணை அனுசரணை வழங்குகிறது இலங்கை



ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இம்முறையும் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கவுள்ளதாகவும், இதற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலர் மனோ தித்தவெல, ஜெனிவாவில் இதனை அறிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா அரச குழுவினர், நேற்று முன்தினம் ஜெனிவாவில் பக்க நிகழ்வாக உப மாநாடு ஒன்றை நடத்தினர்.

இங்கு கருத்து வெளியிட்ட மனோ தித்தவெல, “ 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் காலஅவகாசத்தை அளிக்கும் தீர்மானம் இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும்.

அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் இந்த தீர்மானத்துக்கு பிரித்தானியா, மொன்ரனிக்ரோ ஆகிய நாடுகளுடன், சிறிலங்காவும் இணை அனுசரணை வழங்கும்.

இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கோரியுள்ளது.

புதிய தீர்மானத்தின் மூலம் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் நம்புகிறது. ” என்றும் மனோ தித்தவெல தெரிவித்தார்.

அதேவேளை, சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு அடுத்தவாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின்னர் குறைந்தது ஒரு உப மாநாடு நடத்தப்பட்டு தீர்மான வரைவு குறித்த ஆலோசனைகள் பெறப்படவுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.