சிங்கள அரசின் ஏமாற்றுவேலைக்கு ரஜினி துணை போவதா? – திருமா கடும் கண்டனம் - THAMILKINGDOM சிங்கள அரசின் ஏமாற்றுவேலைக்கு ரஜினி துணை போவதா? – திருமா கடும் கண்டனம் - THAMILKINGDOM
 • Latest News

  சிங்கள அரசின் ஏமாற்றுவேலைக்கு ரஜினி துணை போவதா? – திருமா கடும் கண்டனம்


  நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் யாழ்ப்பாணம்
  செல்லவிருப்பதாக லைகா திரைப்பட நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

  நடிகர் ரஜினிகாந்தை வைத்து வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை என்று சொல்லியிருப்பதோடு, ரஜினி, யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் தற்போது ஜெனீவாவில் நடந்துகொண்டிருக்கிறது.

  இரண்டாண்டுகளுக்கு முன்பாக அதாவது 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இதே மனித உரிமைகள் பேரவை நிகழ்வில் 2015 அக்டோபர் மாதம் , நிறைவேற்றப்பட்ட 30/1 ஆம் இலக்க இலங்கை பற்றிய தீர்மானத்தின் படி,
  இலங்கையின் நீதி விசாரணயில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக தீர்மானத்தின் 6 ஆவது பிரிவும், மாற்றுநிலை நீதி அங்கமொன்றாக பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக 8 ஆவது பிரிவும் அமைந்திருந்தன.

  சிங்கள அரசும் ஒப்புக்கொண்டே நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானமே அரைகுறையானது கூட அல்ல மிகக் குறைவானது, சர்வதேசத்தையும் ஏமாற்றி சிங்களம் காரியம் சாதித்துக்கொண்டது, தீர்மானத்தில் சொன்னபடி நடந்துகொண்டால் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்கிற விமர்சனங்கள் வந்தன.

  ஆனால் சிங்களத்தலைவர்கள், தங்களுக்குள் போட்டி இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் உலகத்தின் முன்னால் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தோடே செயல்பட்டு, அந்தக் குறைந்த பட்சத் தீர்மானத்தைக்கூட நிறைவேற்றாமல் காலந்தாழ்த்திக் கொண்டே வந்தனர்.

  இப்போது நடைபெறுகிற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கைக்கு மேலும் 2 ஆண்டு கால அவகாசம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

  இதற்கு ஈழத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள தமிழர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு,இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி,, யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக மார்ச் 22 புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் நடந்தது..

  இதில் கலந்துகொண்ட மக்கள், இந்தத் தீர்மானத்தை பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டாக முன்மொழிந்தது இலங்கை, ஒன்றரை ஆண்டுக் காலத்தில், அதாவது 2017 மார்ச் மாதத்துக்குள் தன் கடப்பாடுகளை நிறைவேற்றவும் அது முழுமையாகப் பொறுப்பேற்றது. இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அரசாங்கம் தன் கடப்பாடுகளை நிறைவேற்ற உருப்படியாக எதுவும் செய்வில்லை. குடியரசுத் தலைவரும் மற்ற தலைவர்களும் தீர்மானத்தின் முதன்மை கூறுகளை விசாரணைகளில் பன்னாட்டு நீதிபதிகளை இடம்பெறச் செய்வது உள்ளிட்டவற்றை பகிரங்கமாகத் திரும்பத் திரும்ப நிராகரித்தும் உள்ளார்கள் என்று தெரிவித்தனர்.

  அங்கு மட்டுமின்றி உலகெங்கும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்த அந்நேரத்தில்தான் , இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க உள்ளார் என்கிற செய்திக்குறிப்பு லைகா நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஊடகங்களுக்குச் சொல்லப்பட்டது.

  நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இலண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது.

  தமிழ்மக்களை வஞ்சிக்கும் சிங்களத்தின் கொடும்போக்கைக் கண்டித்து எல்லோரும் பேசவேண்டிய நேரத்தில், அதை திசைதிருப்பும் உத்தியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
  சிங்கள அரசுக்குத் துணைபோகும் பாஜகவின் அனுமதியோடு இவ்வறிவிப்புச் செய்யப்பட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை.
  ஏனெனில், ரஜினிகாந்த் போன்ற புகழ்பெற்ற நடிகர் ஒருவரை வைத்து ஒருவிழாவை நடத்தி அந்த ஒளிவெள்ளத்தில் மக்களின் உண்மையான குறைகளை இருட்டில் தள்ளிவிடுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று உலகத்துக்குக் காட்டவும் இந்நிகழ்ச்சி பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

  லைகா நிறுவனத்துக்கும், மிகப்பெரும் செலவில் தயாரிக்கப்படுகிற அந்தப்படத்துக்கான உலக அளவிலான விளம்பரமாக அந்நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணுகிறது. சிங்கள அரசாங்கத்துக்கும் தனியார் முதலாளிக்கும் நன்மை பயக்கும் இந்நிகழ்வைச் செயல்படுத்த எவ்வித ஞாயமுமின்றி உறவுகள், உடைமைகள் மட்டுமின்றி உரிமைகளையும் இழந்துநிற்கும் அப்பாவி மக்களின் கொடுந்துயரம் பயன்படுகிறது என்பதை நினைக்கும்போது உள்ளம் கொதிக்கிறது.

  கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும், எனவே, நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் என்று விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

  2009 இல் போர் முடிந்து எட்டாண்டுகள் கடந்துவிட்ட பிறகும் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச நீதியைக் கூட வழங்க முன்வராத சிங்கள அரசை விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை விடுதலைச்சிறுத்தைகள் களமாடுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்!

  ,
  தொல்.திருமாவளவன்,
  நிறுவனர்-தலைவர்
  விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சிங்கள அரசின் ஏமாற்றுவேலைக்கு ரஜினி துணை போவதா? – திருமா கடும் கண்டனம் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top