நாயகிகளுக்கு அறிவுபூர்வமான கதாபாத்திரங்கள் வழங்குங்கள்-ஜோதிகா
நாயகிகளுக்கு அறிவுபூர்வமான கதாபாத்திரங்கள் வழங்க வேண்டும் என்று இயக்குநர்களுக்கு நடிகை ஜோதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரம்மா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள புதிய படமான மகளிர் மட்டும் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சூர்யா தயாரித்துள்ளார். இதில் நாசர், லிவிங்ஸ்டன், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நடிகை ஜோதிகா,மீண்டும் நடிப்பதற்கும் இந்த இடத்தில் நின்று பேசுவதற்கும் சூர்யாதான் காரணம் என்றும் தனக்கு உதவியாக இருக்கும் நடிகர் சிவகுமார் குடும்பத்தின் அத்தனை ஆண்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஒரு நாயகியின் உண்மையான வயதுக்கு, குறைவான வயதுடைய பாத்திரம் கொடுப்பவர் இயக்குநர் பிரம்மா மட்டும்தான் என்று குறிப்பிட்ட அவர், நாயகி என்றாலே 30 வயது கடந்தவுடன் வயதானவர் என்று முத்திரைக் குத்திவிடுகிறார்கள் என்றும் பல இயக்குநர்கள் 12 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றே அணுகியுள்ளார்கள் எனவும் கூறியுள்ளார்.
பெரிய நாயகர்களின் படங்களை இயக்கும் இயக்குநர்கள் பெண்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அறிவுபூர்வமான கதாபாத்திரங்கள் கொடுக்குமாறும் நகைச்சுவை நடிகர் அருகில் நிற்க வைத்து இரட்டை அர்த்த வசனங்களைப் பேச வைக்கக்கூடாதெனவும் ஜோதிகா வேண்டு கோள் விடுத்துள்ளார்.
மிக கேவலமான அறிமுக காட்சியை பெண்களுக்கு கொடுக்கக்கூடாதென வலியுறுத்திய அவர், படங்களில் நாயகி ஒருவர் நாயகன் பின்னால் 'ஐ லவ் யூ' என்று சொல்லிக் கொண்டே திரிவதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.