கடையடைப்பு போராட்டம் பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை! – வவுனியா வர்த்தக சங்கம்
வடக்கு – கிழக்கு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதவராக வவுனியாவில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை  என வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முடிவுகளை நாம் எடுப்பதற்கு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களோ அல்லது அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களோ இதுவரை எம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீலமீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் இரண்டு மாதங்களை கடக்கின்றன. அந்த மக்களின் போராட்டங்களையும், அவர்களின் உணர்வுகளையும் வர்த்தக சமூகமாகிய நாமும் மதிக்கின்றோம்.
அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் எமது அவா. இருப்பினும் வவுனியா மற்றும் கிளிநொச்சியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் எதிர்வரும் 27ஆம் திகதி பூரண கதவடைப்பு நடைபெறும் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஆனால், வவுனியா வர்த்தக சங்கம் அப்படியான எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. அதேபோல் எமது வர்த்தக சங்கமும் இது தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை. ஆகவே, வவுனியாவில் பூரண கதவடைப்பு என தற்போது வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்பதே எமது கருத்து” என ரி.கே.இராஜலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
 

 
 
 
 
 
 











