`பாகுபலி 2' படம் ஐமேக்ஸ் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகாது என தகவல்
`பாகுபலி 2' படம் ஐமேக்ஸ் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகாது எனக்கூறப்படுகின்றது. இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக ‘பாகுபலி 2’ உள்ளது. இப்படம், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதன் மூலம் அதிக திரையரங்குகளில் திரையிடப்படும் படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் `பாகுபலி 2'. வருகிற ஏப்ரல் 28-ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. மேலும் இப்படம் ஐமேக்ஸ் திரையரங்கிலும் வெளியாகும் என்று பாகுபலி படக்குழு அறிவித்திருந்தது.
தென்னிந்திய மொழித் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் (6K) வீடியோ வடிவில் வெளியாவது இதுவே முதல்முறை என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகாது என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மாறாக தெலுங்கு மற்றும் இந்தியில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
`பாகுபலி 2' படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ‘பாகுபலி’ படத்தை மையமாக வைத்து வெளியான புத்தகங்களை தொலைக்காட்சி தொடர்களாக எடுக்கவும் திட்டம் இருப்பதாக அதன் தயாரிப்பாளர் ஷோபு யாரலகட்டா தெரிவித்துள்ளார்.
450 கோடி ரூபாய் செலவில் உருவான ‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, சாட்டிலைட்ஸ் உரிமம், வெளியீட்டு உரிமம் ஆகியவற்றின் மூலம் 500 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. முதல் நாளிலேயே இப்படம் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








