Breaking News

மோடிக்கு பாதுகாப்பு வழங்க கறுப்புப் பூனைகள் கொழும்பு வந்தன



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்கும் கறுப்புப் பூனை கொமாண்டோக்கள் கொழும்பு வந்திருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக இன்று மாலை கொழும்பு வரவுள்ளார்.

நாளை பிற்பகல் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான பணிகளில் சிறிலங்கா அரசாங்கம் 6000 காவல்துறையினரைப் பணியில் அமர்த்தியுள்ளது.

எனினும், இந்தியப் பிரதமருக்கான தனிப்பட்ட பாதுகாப்புப் பணியில் கறுப்புப் பூனைகள் எனப்படும் இந்தியாவின் மிக முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் கொமாண்டோக்களே ஈடுபடுத்தப்படுவர்.

இந்தியப் பிரதமர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போதும், அவர் பயணம் செய்யும் இடங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் ஏற்கனவே கறுப்புப்பூனை கொமாண்டோக்களின் அணியொன்று கொழும்பு வந்துள்ளது.

அத்துடன் இந்தியப் பிரதமர் பயணம் செய்யும் மற்றும் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் நான்கு எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளும் ஏற்கனவே கொழும்பு வந்துள்ளன.

இவை ஹற்றனில் கடந்த இரண்டு நாட்களாக தரையிறங்கி இந்தியப் பிரதமரின் வருகைக்கான ஒத்திகைகளில் ஈடுபட்டிருந்தன.