Breaking News

முன்னாள் போராளிகளை உள்ளீர்க்க தமிழ் அரசுக் கட்சி முடிவு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தமது கட்சிக்குள் உள்ளீர்த்துக் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி முடிவு செய்துள்ளது.


மட்டக்களப்பில் நேற்றுமுன்தினம் நடந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய குழுக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

‘புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வாழ்க்கை முறையை சரியான முறையில் மேம்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சமூகத்தில் உள்ஈர்ப்பு செய்யப்பட்டு சரியான முறையில் நடத்தப்பட வேண்டும் .

அரசியல் வாழ்க்கைக்கு சரியான விதத்தில் உரிய நேரத்தில் கதவு திறக்கப்பட்டு அவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வடக்கில் முன்னாள் போராளிகளால் தொடங்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், அதற்கு கூட்டமைப்பு இணங்கியிருக்கவில்லை.

இதையடுத்து ஜனநாயக போராளிகள் கட்சி தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தது.

அதேவேளை, முன்னாள் போராளிகளால் திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் புதிய அரசியல் கட்சிகள் அண்மையில ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.