Breaking News

தையிட்டியில் புதிய விகாரையை அமைக்க காணி அளவீடு



வலி.வடக்கில் உள்ள தையிட்டிப் பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான காணி அளவீட்டுப் பணிகள் நேற்று, மூன்று பௌத்த பிக்குகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்ப ட்டுள்ளன.

1983ஆம் ஆண்டுக்கு முன்னர், தையிட்டிப் பகுதியில் 20 பரப்புக் காணியில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக வலி. வடக்கு பிரதேசசபை ஆவணங்களின் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அமைவாகவே, இந்த அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த விகாரையை விட்டு 1983ஆம் ஆண்டுக்கு முன்னர், பிக்குகள் வெளியேறிய நிலையில், சில குடும்பங்கள், விகாரைக் காணிகளில் குடியமர்ந்திருந்தனர். அவர்களும், 1990ஆம் ஆண்டு போரினால் இடம்பெயர்ந்தனர்.

அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து தையிட்டிப் பகுதி விடுவிக்கப்பட்டதை அடுத்து, அந்தக் காணிகளில் குடியிருந்த 7 குடும்பங்கள் மீண்டும் குடியமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், விகாரைக்கான காணி உறுதி ஆவணங்களுடன் பிரதேச செயலகத்தை அணுகிய பிக்குகள், அதை அடையாளப்படுத்தி, மீட்பதற்கான நடவடிக்கையாகவே, நேற்று அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டனர்.

இதனால் அங்கு குடியிருக்கும் 7 குடும்பங்களும் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, விகாரைக் காணியை மீட்டு அங்கு புதிய விகாரை ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.