ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார், எடப்பாடி பழனிசாமி
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. கட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியின் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது.
2 நாட்களுக்கு முன்பு வரை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும் அ.தி.மு.க. இருந்து வந்தது.
இந்த நிலையில், சிறையில் இருந்து டி.டி.வி.தினகரன் வெளியே வந்த பிறகு அ.தி.மு.க.வில் மற்றொரு அணி உருவாகி இருக்கிறது. ஆரம்பத்தில் கட்சி உடைந்தபோது, கூவாத்தூர் விடுதியில் தங்கவைக்கப்பட்டபோது தரப்பட்ட வாக்குறுதிகளை அடையாதவர்கள் மற்றும் புதிய ஆதாயம் பெறும் எண்ணமுள்ள எம்.எல்.ஏ.க்கள் பலர் டி.டி.வி.தினகரனை சந்தித்து வருகின்றனர்.
டி.டி.வி.தினகரனை இதுவரை 29 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலை, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், மாவட்ட வாரியாக அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்களை 6, 7 மற்றும் 8-ந் தேதிகளில் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேச முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார்.
அதன்படி, நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர், ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க் களை தலைமைச் செயலகத்தில் தனது அறையில் பிற்பகல் 3 மணிக்கு மேல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
மாவட்ட வாரியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். ஒவ்வொரு மாவட்டத்தினரும் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் முதல்-அமைச்சருடன் பேசினர். அப்போது தொகுதியில் உள்ள குறைகள் மற்றும் அந்தந்த எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாவட்ட ரீதியாக சந்தித்த எம்.எல்.ஏ.க் களின் விவரம் வருமாறு;-
ராயபுரம்- அமைச்சர் டி.ஜெயக்குமார்; பெரம்பூர்- வெற்றிவேல்; மயிலாப்பூர்- நடராஜன்; விருகம்பாக்கம்- வி.என்.ரவி, தியாகராயநகர்- சத்யா.
மதுரவாயல்- அமைச்சர் பெஞ்சமின்; அம்பத்தூர்- அலெக்சாண்டர்; பொன்னேரி- பலராமன்; கும்மிடிப்பூண்டி- கே.எஸ்.விஜயகுமார்; பூந்தமல்லி- ஏழுமலை; திருத்தணி- நரசிம்மன்.
ஸ்ரீபெரும்புதூர்- பழனி; திருப்போரூர்- கோதண்டபாணி.
கடலூர்- அமைச்சர் எம்.சி. சம்பத்; காட்டுமன்னார் கோவில்- முருகுமாறன்; பண்ருட்டி- சத்யா; விருத்தாசலம்- வி.டி.கலைச்செல்வன்;
விழுப்புரம் - அமைச்சர் சி.வி.சண்முகம்; உளுந்தூர்பேட்டை - குமரகுரு; வானூர் - சக்கரபாணி; கள்ளக்குறிச்சி - பிரபு;
ஆரணி - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்; செய்யாறு - தூசி கே.மோகன்; கலசப்பாக்கம் - பன்னீர்செல்வம்;
அரியலூர் - அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன்; ஜெயங்கொண்டம் - ராமஜெயலிங்கம்;
குன்னம் - ஆர்.டி.ராமச்சந்திரன் (மாவட்ட செயலாளர்); பெரம்பலூர் - ரா.தமிழ்ச்செல்வன்.
இந்த நிலையில், இன்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விருதுநகர், மதுரை உள்பட பல மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் சந்திக்கின்றனர்.
இதற்கிடையே டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான பெரம்பூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் அளித்த பேட்டி வருமாறு:-
சென்னையில் அ.தி.மு.க. கட்சிக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறோம். அதில் ஜெயலலிதா இல்லை. மீதமுள்ள 5 பேரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினோம். இது சாதாரண முறையிலான சந்திப்புதான். எனது நிலைப்பாடு எதுவோ, அதுதான் டி.டி.வி. தினகரனை சந்தித்துள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடும் ஆகும். எங்களால் அரசுக்கு எந்த வித நெருக்கடியும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.








