Breaking News

மகிந்த, உதயங்கவைச் சந்தித்த பிரதியமைச்சரிடம் விளக்கம் கோர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு



சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அருந்திக பெர்னான்டோவிடம் விளக்கம் கோருவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் அருந்திக பெர்னான்டோ அண்மையில் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ஜப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவையும், அவரது மைத்துனரும், ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்புகள் தொடர்பான ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையிலும், அவரைக் கைது செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், பிரதி அமைச்சர் அருந்திக பெர்னான்டோ, அவரைச் சந்தித்திருந்தார்.

இது தொடர்பாக நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நீண்டநேரம் விவாதிக்கப்பட்டதுடன், அருந்திக பெர்னான்டோவிடம், விளக்கம் கோருவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.