Breaking News

மலையக பாடசாலைகளுக்கு 3,000 ஆசிரியர்கள்: பிரதமர் அங்கீகாரம்

மலையக தோட்டப் பாடசாலைகளுக்கு மூவாயிரம் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளளார்.இது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவிருப்பதாகவும். இதன் பின்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக ஆசிரியர்கள் தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும், கடந்த காலத்தில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் வர்த்தகமானியில் இடம்பெற்ற தவறுகள் இம்முறை நீக்கப்படும்.

கடந்த காலத்தில் 10 வருட காலம் நிரந்தர வதிவிடம் உறுதி செய்யப்பட வேண்டுமென கோரப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது 5 வருட காலமாக இதனைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தோட்டப் பகுதி என்று குறிப்பிடப்பட்டதனால் நகர பகுதிகளில் வாழும் சில தகுதியானவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.இந்த பகுதியில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு நியாயம் வழங்கும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.